பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 79
54
இயற்கையும் தமிழும்!
சோலையில் ஊதுங் குயிலிசையில் - தமிழ்ச்
சொற்களுண்டு தம்பி கேட்கிலையோ? - அதி
காலையில் பாடி யெழுப்பு கின்ற - கருங்
காகத்திடைத் தமிழ் ஓசையுண்டு.
கறவைப் ‘பசு’ விங்கே கத்துது பார்! - அதில்
கன்னித் தமிழ்ச் சொல் லொலிக்குது பார்! - நல்ல
கறவை யினங்கள் மரக்கிளையில் - குந்திப்
பாடுஞ் சொல் தமிழுக்குச் சொந்தந் தம்பி!
குழலுக்கு மிஞ்சிய குரலைக் கொண்டு - பச்சைக்
குழவி யொலித்திடுஞ் சொல்லென்ன சொல்?
குழலுடைப் பெண்டிர் ‘கணவரே’ என்று - தாம்
கொண்டாரைக் கூப்பிடும் சொல்லென்ன சொல்?
அன்புக்கு ‘நார்’ என்ற சொல்லெதைக் காட்டும்;
அன்புள்ளோர் தம்மைப் பிணைப்ப தல்லால்,
‘கண்’ணென்ற பெயர்ச்சொல்லை நீட்டிப் பார் - தம்பி,
“காண்” என்ற வினைச்சொல் தெரிந்திலையோ?
முழமுடைக் கைகட்கு ‘முழங்கைகள்’ என்றும் - ஓர்
முழமுடைக் கால்கட்கு ‘முழங்கால்கள்’ என்றும்
எழுந்தன தமிழில், வேறெங்கே உண்டு? - இது
எங்கள் தமிழ்மொழி தம்பி, படி!
தொடுப்பதால் மாலைக்குத் ‘தொடை’ என்றுபேர்,
தொங்கினால் மாலையைத் ‘தொங்கல்’ என்பார்,
உடுப்பதால் ஆடைக்கு ‘உடை’யென்று பேர்,
உண்பதால் சோற்றுக்கு ‘உண’ வென்று பேர்.
புல்லினைப் பறித்தற்குப் ‘பிடுங்கல்’ என்றும், மென்மைப்
பூவினை எடுத்தற்குக் ‘கொய்தல்’ என்றும்
சொல்லிலே செயல் கண்ட தமிழனைப் போல் - வேறு
சொற்களைக் கொண்டது எந்த மொழி?