பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 83
56
கடல்!
நிலமெனும் பெண்ணுக் கிந்த
நீள்கடல் நீல ஆடை!
இலமெனும் ஏழை யர்க்கே
இமிழ்கடல் கழனி! அங்கு
நிலமில்லை! விளைவோ உண்டு!
நித்தமும் வேளை தோறும்
கலமிசை மிதப்பார் வாழ்வைக்
கடல்நன்கு நடத்தி வைக்கும்!
துன்புற்றார் துன்பத் தோடு
தொடர்ந்திடும் அலையின் ஓலம்!
இன்புற்றார் இன்பத் தோடும்,
இயங்கிடும் அலையின் கூத்தே!
அன்புற்றார், கலைவல் லார்கள்
அகமகிழ்ந் துவக்கும் காட்சி!
முன்புற்றார் உள்ளத் துள்ளே
மூட்டுமோர் இனிமைப் பாய்ச்சல்!
நடுக்கடல் அமைதி கற்ற
நல்லறி வாளர் போலாம்!
துடுக்குளார் நுனிப்புல் மேய்ந்தார்,
தன்மையைக் கரைநீர் காட்டும்!
ஒடுக்குளம் கொண்டார் கையின்
உடைமையோ யார்க்கும் என்றும்
கொடுக்கலுக் கியலா தென்னும்
உண்மையை உவர்நீர் காட்டும்!
கடல்பெரு நீல வானம்!
கப்பல்கள் பறவைக் கூட்டம்!
அடல்நிற மறவர் போலும்
அலைத்திறம்! அத்திறத்தால்
உடல்குளிர் வெய்தும் நல்ல
உளத்திற்கோ மேன்மேல் இன்பம்!
இடருற்ற வாழ்வில் நாளும்
இளைத்தார்க்குக் கடல்காண் இன்பம்!
-1950