90 ☐ கனிச்சாறு – ஆறாம் தொகுதி
61
கடலே!
களிப் புற்றாய் போல் கடலே கடலே
ஒளிப் புனல் அலைக்கை ஓயா தோச்சி
சுழித்துச் சுழித்துக் கூத்திடு கின்றாய்!
கொழித்துக் குலங்கும் கவின்மிகு கடலே
என்று தொடங்கினை இத்திருக் கூத்தினை
இன்றும் என்றும் இமைப்பொழு தாகிலும்
நின்றிசை முழக்கா திருந்தனை சொல்லோ?
உயிர்சூழ் இவ்வுல குவகை கொள்ளினும்
பயிர்விளை வின்றிப் பஞ்சத் துழலினும்
நின்னுடை இசையும் நின்னுடை நடமும்
முன்னை போலவே முழங்கிடு மாறே!
யாது கண்டனை! என்மகிழ் வுற்றனை?
தீதுரை உலகிற் றே ரா துழலும்
எம்போ லாயின் ஏழைகள் தாமும்
உம்போ லுவந்துயிர் மகிழ்வதற் கொருவழி
காட்டுவை கடலே! காட்டுவை கடலே!
நீர்த்துளி யுண்டு நித்திலம் விளைக்கும்
சீர்த்திறன் பெற்றனை எனுந்திருக் கூத்தோ?
அளவிறந் துயர்வகை ஆக்குதி என்னும்
உளமகிழ் நடமோ உயிர்தரு மிசையோ?
ஒப்பிலா துணவிலும் ஓர்துளி கூட்டி
செப்புலாச் சுவைதரும் உப்புடைத் திறமோ
எத்திறன் பற்றிநீ ஏற்றம் பெறுகுதி?
அத்திறன் யாதென் அறைகுதி கடலே!
-1955 (?)