94 ☐ கனிச்சாறு – ஆறாம் தொகுதி
64
நிலவும் நானும் !
வெள்ளி நிலா வொளியில் - குளிர்
வேளையிலே மலர்ச் சோலையிலே - குளத்
தல்லி தரும் எழிலை - அள்ளி
அள்ளிப் பருகிய வாறிருந்தேன் - அந்த
வெள்ளி நிலா வொளியில்!
வானத்து மின்னு டுக்கள் - என்னை
‘வா’வென ‘வா’வெனக் கூவினவே - கெண்டை
மீனத்துச் சாயலெல்லாம் - அவை
மீதிருக்க நெஞ்சுத் தான்கொடுத்தேன் - அந்த
வெள்ளி நிலா வொளியில்!
கோல நிலவெழிலைக் - கண்டு
கொண்டன வென்னிரு கண்களுமே - இந்த
ஞாலமெலா மெனைப்போல் - காண
நான் உவப்பேன்; இன்பப் பா தொடுப்பேன் - அந்த
வெள்ளி நிலா வொளியில்!
திங்களை நான் மணந்தேன் - அவள்
தீண்டித் தழுவினாள் தண்ணொளியால் - காதல்
எங்களைப் பின்னிடவே - உடல்
இன்பங் கண்டேன்; அதன் எல்லை கண்டேன் – அந்த
வெள்ளி நிலா வொளியில்!
என்னை நிலா முகத்தாள் - அன்பு
எல்லையிலே முகந் தன்னைத் தொட்டே - பசும்
வெண்ணை நிகர்த்த இதழ் - தன்னை
வைத்தெடுத் தாளென் னுளம்பறித்தாள் - அந்த
வெள்ளி நிலா வொளியில்!
கன்னத்திலும் இரு கண்களிலும் - இரு
கைகளிலும் உடல் மீதினிலும் - குளிர்ப்
புன்னகையோடி தழை - வைத்துப்
பூரித்தனள்; எனை வாரித் தழுவினள்
வெள்ளி நிலா வொளியில்!