பக்கம்:கனிச்சாறு 6.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


67

நீ, துகள்!


எண்ணருங் கோடி யாண்டாய்
இருக்கின்றாய் துகளே!நீ - முன்
விண்ணொடும் விண்ணாய்த் தோய்ந்து!
விசும்பெலாம் உலாவந் தாயோ?
நுண்ணரும் அணுவாய் விண்மீன்
கூட்டத்தில் நுழைந்து தாவித்
தண்ணருந் துளியாய் மாறித்
தரைவந்தே இறங்கி னாயோ?

தண்ணருந் துளியாய் நீதான்
தரைவந்த பின்னை, ஆங்கோர்
திண்ணருங் கல்லுட் பாய்ந்து
தேய்ந்துரு மாறி மாறி
விண்ணடுங் கிடியி னோடும்
வெள்ளத்தின் சுழற்சி யோடும்
மண்ணொடும் பெரும்போ ராட்டம்
மலைந்து,நுண் மணலா னாயோ?

இருண்டநின் கதைதான் என்ன?
எத்தனை ஊழிக் காலம்
உருண்டனை யோ? வன் பாறை
ஒன்றினோ டொன்றாய் மோதிப்
புரண்டனை யோ? நுண் தூளாய்ப்
போயினை யோ? மண் ணோடு
திரண்டொரு குன்றாய் மீண்டுந்
திணிந்துரு மாறி னாயோ!

மாறுவாய் பின்னும்! ஈண்டோர்
மலரினும் ஒளிர்வாய்; நீராய்
ஊறுவாய்; உடலுக் குள்ளும்
உலவுவாய்; தீயுட் பாய்ந்து
வீறுவாய்; காற்றி னூடாய்
விண்ணுக்கு மீண்டுந் தாவி
ஏறுவாய்; இறங்கு வாய்; நீ
இறப்பிலா திருக்கின் றாயே!

-1971

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/124&oldid=1445384" இலிருந்து மீள்விக்கப்பட்டது