பக்கம்:கனிச்சாறு 6.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


அஞ்சுகின்ற பொருளையெல்லாம் கடவுள் என்றே
அறிவற்றோர் கூறியுமப் பொருளைக் கண்டும்
கெஞ்சிதம்மைக் காப்பாற்ற வேண்டும் மென்றும்
கேட்பதுபோல் ‘மந்திரங்கள்’ எழுதி வைத்தார்
நெஞ்சழுத்தம் தன்னைப் பேய் அறைந்த தென்று
நினைத்திட்டார்! மற்றுமுள எத்தர் தங்கள்
வஞ்சத்தால் மற்றவரை ஏய்ப்பால் சாய்க்கும்
வகை செய்தார்; தாம்வாழ வழிகொண் டாரே! 5

இக்காலை அறிவியிலின் விரைவால் மக்கள்
ஏற்றமுறு கின்றாரே! கல்லா ரெல்லாம்
அக்காலை யிருந்தவர்போ லில்லர்! கற்போர்
அதிகரித்துக் கொண்டுவரு கின்றா ரன்றோ?
தக்காத கொள்கையெல்லாம் மறைந்து போக,
தந்நலத்தால் வாழ்வோர்கள் குறைந்து போகப்
புக்காத புதுமையெலாம் வளர மக்கள்
போகாத இடமெல்லாம் போகா நிற்பர்! 6

உழைக்காம லுண்போர்கள் குறைந்தார்; வாழும்
உலுத்தர்களும் அலுத்துவிட்டார்; மதங்கள் கூறும்
மழைக்காக ஒருகடவுள், மக்கள் தம்மை
மாளவைக்க வொருகடவுள், அவரைக் காத்துப்
பிழைக்கவைக்க வொருகடவுள், பெண்டிற்கெல்லாம்
பிள்ளைதர வொருகடவுள், கல்விக்கொன்று
உழைக்காது செல்வந்தர வொன்றென் றெண்ணும்
உலகத்துக் கடவுளெலாம் விரைவில் மாளும்! 7

வெய்யில் மழை பாராமல் உழைக்கும் மக்கள்
வெயர்வை தனில் விளைகின்ற பொருளை யெல்லாம்
வெய்யில் மழை பாராது நிழலில் வாழ்வோர்
விழுங்குவது மாய்ந்துவிடும்! இன்னுஞ் சொன்னால்
மெய்யதனை வருத்தியதன் உழைப்பால் உண்ணும்
மெய்க் கொள்கை பரவிவிடும் நாட்டில்; மக்கள்
பொய்சொல்லிப் பிழைத்தற்கு முடியா வாறு
புத்துணர்வும் அடங்கிவிடும் எதிர்கா லத்தில்! 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/132&oldid=1445397" இலிருந்து மீள்விக்கப்பட்டது