பக்கம்:கனிச்சாறு 6.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  107


எல்லாரும் உழைப்பார்கள்! ஏற்றத் தாழ்வும்
இல்லாமற் போகும்! மதம் இருக்கா தென்பேன்!
கல்லாத நிலையொழியும்! கடவுள் மாயும்!
காணியெலா மோராட்சி நிலவும்! வாழும்
பொல்லார்கள் மாண்டொழிவர்! பொய்செத்துப் போகும்!
புரட்டெல்லா மிருக்காதே! உயர்வு தாழ்வை
எல்லாரும் சேர்ந்தொழிப்பார்! அறிவு மிக்கார்
எல்லாரும் சேர்ந்தாளக் காண்போம் பாரீர்! 9

-1952





71

உணர்வுக் கனல் !




ஆற்றாத பேருணர்வோ, ஆழ்ந்தறியா நற்றிறமே
அயரா வேட்கை,
ஊற்றாகப் பெருக்கெடுக்கு
மொருநிலையோ, கூர்நினைவோ
உணர்வின் வெப்பம்,
காற்றாகப் புகுந்துடலைக் காய்ச்சுகின்ற கொடுநிலையோ
கரைகாண் நெஞ்சோ,
கூற்றாக எனையறுத்துக் கூறுகூ றாய்ச் சிதைக்கக்
குலைகின் றேனே!

நீந்தாத நினைவென்னும் நெடுங்கடலோ? நெஞ்சுணர்வில்
நிலையாய் நின்று
மாந்தாத பெருமகிழ்வோ? மறக்காத பேரிடரோ?
மனத்தால் அன்பை
ஏந்தாத கொடுஞ்செயலோ? இறங்காத பெருந்துயரோ?
என்றன் நெஞ்சைக்
காந்தாத பொழுதிலதாய்க் கனலென்னும் வல்லுணர்வில்
காய்கின் றேனே.

-1954
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/133&oldid=1445399" இலிருந்து மீள்விக்கப்பட்டது