இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
108 ☐ கனிச்சாறு – ஆறாம் தொகுதி
72
ஆடுவித்தாய்!
என்னை இறையென் றியம்பிடச் செய்துளத்
தேறிநின்றே
உன்னைக் குடிவைத்துக் கொண்டுகூத் தாடுவை
உள்ளுயிரைத்
தின்னும் உணர்வை எனக்களித் தாய்மொழி
தேக்கிவைத்தே
பன்னும் இசைத்தமிழ்ப் பாடலி னாலுனைப்
பாடுதற்கே!
பாட்டினைப் பற்பல கோடி யிசைத்துப்
பராவினர்க்கும்
கூட்டினை வாட்டியுள் ஆவி யுனக்குக்
கொடுத்தவர்க்கும்
காட்டினை யல்லையுன் காட்சியைக் கண்டு
களித்ததில்லர்;
ஆட்டினை யேவுணர் வாலுயி ரையுளத்
தாட்டுவித்தே!
-1955