110 ☐ கனிச்சாறு – ஆறாம் தொகுதி
75
இறைப்பத்து!
ஊனுயிரை உந்துவதும் உள்ளத்தே பேசுவதும்
வான்வளிதீ நீர்நிலமாய் வாய்ந்ததுவும் - மேன்மேற்
புதிராய் அறிவாய்ப் பொருள்களுமாய் நிற்ப
தெதுவோ அதுவே இறை
1
எண்ணங் கொளுத்துவதும் எண்ணத் துலங்குவதும்
பண்ண முனைப்பதுவும் பல்லுயிருந் தோற்றப்
புதுவெறியா லாண்பெண்ணைப் புல்லுவித்தும் நிற்ப
தெதுவோ அதுவே இறை.
2
முண்டும் பசித்தீயை மூட்டுவதும் மொய்த்தவுணா
உண்டு செரிப்பித்தும் உள்ளிருந்து - பிண்டப்
பொதியுடலை ஓய்வுறவே பொன்றுவித்தும் நிற்ப
தெதுவோ அதுவே இறை.
3
பல்லுயிரை அன்பாற் படுப்பித்தும் பல்லுலகை
வல்லிழுப்பாற் கட்டி வயங்குவித்தும் - மெல்ல
முதிரும் உயிர்க்கு முடிவாயும் நிற்ப
தெதுவோ அதுவே இறை.
4
எண்ணற்ற பல்லுயிர்க்கும் ஏற்ற உருக்கொடுத்தும்
வண்ணஞ் சுவைபண்பு வாய்ப்பித்தும் - உண்ண
உதவுபொருள் பல்கோடி ஊன்றுவித்தும் நிற்ப
தெதுவோ அதுவே இறை
5
நெறிமுறைக்குத் தப்பாமல் நேர்ந்ததுவும் வல்லார்
அறிவியற்கும் ஆன்றறிவாய் ஆழந்ததுவும் - ஆழ்ந்தார்
இதுவோ அதுவோ எனவிழைவார்க் கென்றும்
எதுவோ அதுவே இறை.
6
ஒன்றினுள் ஒன்றாக உள்ளடங்கித் தோன்றுவதும்
துன்றும் அணுவாய்த் துலங்குவதும் - தொன்று
முதுபொருளாய் வீங்கி முகிழ்ப்பதுமாய் நிற்ப
தெதுவோ அதுவே இறை,
7