114 ☐ கனிச்சாறு – ஆறாம் தொகுதி
76
ஏன் படைத்தாய்!
இறைவநின் அருள்செவி கேட்குமா றிதனை
ஈண்டெடுத் தியம்புவேன்; இதனுள்
மறைவிலை; அறிகிலா மயலிலை; நின்பால்
மகனெனும் பேருரி மையினால்
குறைவறும் உன்றன் குளிர்செயும் அன்பால்
கூறுவேன்; அஞ்சுதல் தவிர்ந்தேன்;
பொறைசெய் பிழையெனின்; அன்றெனின் அறஞ்செய்;
புவிநலங் காத்தலுங் கடனே!
விண்ணினைப் படைத்தாய்; காற்றினைப் படைத்தாய்!
வெயிலினை இருளினைப் படைத்தாய்!
மண்ணினைப் படைத்தாய்; மழையினைப் படைத்தாய்!
மலை, கடல், ஆற்றினைப் படைத்தாய்!
எண்ணருங் கோடி உடுக்களைப் படைத்தாய்!
இடியினை மின்னலைப் படைத்தாய்;
பெண்ணினைப் படைத்தாய் ஆணினைப் படைத்தாய்;
பித்தரை என்செயப் படைத்தாய்?
பன்னூறாயிரம் உயிர்களைப் படைத்தாய்!
பசிக்கென உணவுகள் படைத்தாய்!
பொன்னினைப் படைத்தாய்; இரும்பினைப் படைத்தாய்!
புடவியுள் தொழிலினைப் படைத்தாய்
நின்னருள் விளங்கிட இனியரைப் படைத்தாய்
நினக்கெனப் புலவரைப் படைத்தாய்
இன்னருஞ் செயல்களைப் படைத்தபின் நீயே
ஏழ்மையை என்செயப் படைத்தாய்?
விலையறு மணிகளை நிறங்களைப் படைத்தாய்;
வேட்கையைப் பூட்கையைப் படைத்தாய்
குலைவறுஞ் செயல்களை ஒழுங்குறப் படைத்தாய்;
குறிகளும் பொறிகளும் படைத்தாய்!
அலைவுறு மின்பமிங் காயிரம் படைத்தாய்!!
அதன்வழி அமைதியைப் படைத்தாய்;
கலைஞரைப் படைத்தாய்! காவலர்ப் படைத்ததாய்!
கயவரை என்செயப் படைத்தாய்!
-1962