பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 115
77
அறியாமை வாழ்வு!
(தரவு கொச்சகக் கலிப்பா)
மன்பதையின் சிறப்பறியீர்;மனத்தொளிருஞ் சுடரறியீர்;
புன்புரைசொல் வினைமிகுந்தீர்; புறத்தறிவே உயர்வென்று
பன்வகையால் உடல்எழிலைப் பரவுகின்றீர், பாரகத்தீர்!
என்கொலும் தறியாமை; இதுவாழ்வென் றியம்புவதே!
முன்பிருந்த பழம்பெருமை முழக்கிடுவீர்; முன்னிருப்பார்க்
கன்பிருந்த மொழிபுகலீர்; அயலார்க்கொன் றுதவுகிலீர்;
என்பிருந்த தோற்பாவைக் கெழில்போலும் இருந்தீரே,
என்கொலும தறியாமை, இதுவாழ்வென் றியம்புவதே!
தின்பொருளின் சுவைபேசித் தேய்பொருளின் புகழ்பாடி
மின்பொருந்தும் ஆற்றலெலாம் மேவியுளம் மேவாமே
வன்மமிகு கொடுஞ்செயலின் வாய்ப்பட்டீர்! வாய்மையிலீர்!
என்கொலு மதறியாமை, இதுவாழ்வென் றியம்புவதே!
கன்மடையி னிடைநீராய்க் கலகலெனச் சலசலெனச்
சொன்மாரி பொழிவிப்பீர்! சுழிமனத்தீர்! தேங்குபுனல்
என்மான வுணர்வடங்கிச் செயலிழப்பீர், இருநிலத்தீர்!
என்கொலும தறியாமை, இதுவாழ்வென் றியம்புவதே!
முன்பருவத் தலைந்தாடி இளமையிலே மொய்த் தடங்கண்
மின்பாய்விற் கிழுப்புண்டு மேனிநற வுண்டவளோ
டின்பாய்ந்த பெரும்பயனா வெண்ணரிய மகப்பெறுவீர்!
என்கொலும தறியாமை, இதுவாழ்வென் றியம்புவதே!
தன்மனைக்கும் தன்மகர்க்கும் தங்கியிளைப் பாராமே,
பன்வகையாற் பொய்ச்சாற்றிப் பன்னலமுஞ் செய்விப்பீர்!
என்பயனிங் கெதிர்கொண்டீர்? இவண்பிறந்த ஏதறியீர்
என்கொலும தறியாமை, இதுவாழ்வென் றியம்புவதே!