பக்கம்:கனிச்சாறு 6.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


79

வித்தும் விளைவும்!


தென்மொழிக்கே மூச்சுயிர்த்து விடுதலைக்கே வாழும்
தீதறியா என்னுளத்தைக் கேள்வியொன்று கேட்டேன்:
“புன்மொழிகள் தாங்கினைநீ; பழிபலவும் ஏற்றாய்;
புதுநினைவுக் கிடமின்றி ஒருநினைவால் வாழ்ந்தாய்;
வன்மொழிக்கும் சோர்கிலைநீ; வஞ்சருக்கும் அஞ்சாய்;
வாழ்க்கையெனும் தனிநிலைக்கும்பொதுமையுரை சொன்னாய்;
இன்மொழிக்கும் மயங்கிலைநீ; ஏற்றம்பல தோற்றாய்;
ஏசலுக்கும் கூசிலைநீ!, என்னபயன் கண்டாய்?”

“கதிர்தோன்றி விழும்வரைக்கும் காட்சி, உரை யாவும்
கையசைத்துச் செய்துவரும் பல்வினையும் போக்கும்
எதிர்தோன்றி எவர்தடுத்துக் கூறினும்சா யாமல்
“எந்தமிழ்க்கே எந்தமிழர் நாட்டினுக்கே” என்னும்
புதிர்தோன்றும் வாழ்க்கைக்கே பொழுதமைத்துக் கொண்டாய்;
போக்கிலெள்ளின் மூக்களவும் மாற்றமிலை என்றாய்;
கதிர்தோன்றும் எனும்நினைவில் காணிபல வித்திக்
காத்திருந்தாய்; காத்திருந்தாய், என்னபயன் கண்டாய்?”

“மாறிவரும் வாழ்க்கையிலே மனமழிப்பார் கோடி;
மயக்கிவரும் உலகியலில் வயப்படுவார் கோடி;
ஊறிவரும் நலங்களிலே உளம்புதைப்பார் கோடி;
உவப்பளிக்கும் வருவாய்க்குத் தவங்கிடப்பார் கோடி;
ஏறிவரும் இல்லறத்தில் இலக்கிழப்பார் கோடி;
இழுத்தலைக்கும் பணங்காசில் வழுக்கிடுவார் கோடி;
கூறிவரும் கொள்கையிலோர் அணுவுங்குறை யாமல்
கூறுகின்றாய்; கூறுகின்றாய், என்னபயன் கண்டாய்?”

“முட்டுகின்ற வறுமையினுள் மூழ்கியழி யாமல்
முகமாறிப் பேசுகின்ற அன்பர்பலர் கண்டாய்!
விட்டகன்ற அன்பர் பலர் உனை வீழ்த்தும் போக்கில்
வீசுகின்ற பொய்யுரைக்கும் வீழவில்லை நின்தோள்;
கட்டுகின்ற நல்லமைப்பும் சிதைகின்ற தவரால்;
காட்டுகின்ற பாதையிலோ கல்பரப்பி வைப்பார்;
எட்டுகின்ற கொள்கைக்கோ எழுநூறு தடைகள்;
எழுதுகின்றாய்; எழுதுகின்றாய் என்னபயன் கண்டாய்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/144&oldid=1445412" இலிருந்து மீள்விக்கப்பட்டது