பக்கம்:கனிச்சாறு 6.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


நின்னுடலம் வளர்ச்சியுற உணவருந்தும் நின்வாய்
நிகழ்த்துவினை மென்றுணவை விழுங்குநிலை ஒன்றே!
உன்னுடலுள் சென்றவுண வுட்கலந்த சாற்றை
உறிஞ்சுவதும் செந்நீராய் மாற்றுவதும் யார்கொல்?
தின்னுணவைத் தேடியிடுங் கையோநின் வாயோ?
திகைப்படைந்தால் உணவுநிலை பயன்மாறிப் போமோ?
என்னுணர்வாய் நீயிலங்க வேண்டுமெனக் காண்பாய்!
எதிர்விளைவைக் கண்டெதற்கேன் நீதயங்கல் வேண்டும்?

வித்திடுக; வித்திடுக, வித்திடுக! தன்னால்
விளைந்துவரும்; விளைந்துவரும்; விளைந்துவரும் ஆக்கம்!
எத்திசையில் எத்தரையில் எத்துறையில் நின்னால்
இயன்றிடுமோ அவ்வகையில் முயலுகநீ நன்றே!
வித்தியதன் விளைவெண்ணிக் கவன்றிடுதல் வேண்டா;
விளைவுசிறி தாமெனிலோ பயனுடனே தோன்றும்!
முத்துவிளை காலமென்ன, கரிவயிர மாகும்
முழுக்காலம் என்னவென்ன நீயறிய மாட்டாய்!

மரமழிந்து நிலம்புதைந்து பழுத்தணுக்கள் கரியாய்
மாறவிரு பத்திலக்கம் ஆண்டுசெலல் வேண்டும்!
உரமிகுந்து கருமையுற்று நிலக்கரியாய் மாறி
உருப்பெறவோ மேலுமிரு பத்திலக்கம் ஆண்டு!
கரிவயிர மாகவிரு பத்திலக்கம் மேலும்
கழிந்திடுதல் வேண்டுமதைக் கனியியலார் அறிவார்!
கரிமாறிக் காழகமாய் மாறுதற்கே ஊழி
காத்திருக்க வேண்டுமெனில் உள்ளமென்ன கரியா?

சிறையார்ந்து புடைபரந்து விரிந்திடுவான் வெளியில்
சிறுத்ததொரு கதிரவனின் தெறித்தபொறி உலகம்
துறையார்ந்து கிடக்கின்ற சிறுமணல்போல்! அந்தத்
துணுக்குலகின் அணுக்களுளே துண்ணணுவும் நீதான்!
குறையார்ந்த சிறுமாந்தத் துகளே! நீ சொல்வாய்!
“கொத்திவிதை யிட்டவுடன் பயனிலைகாண்” என்பாய்!
மறையார்ந்த தோற்றமதும் முடிவதுவும் கண்டார்
மாந்தருக்குள் ஒருவருண்டோ? மற்றுனக்கேன் கவலை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/146&oldid=1445414" இலிருந்து மீள்விக்கப்பட்டது