பக்கம்:கனிச்சாறு 6.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  121


இயற்கையெனும் பெருவினைஞன் இட்டவொரு தீர்ப்பில்
எழுந்தனை நீ; எழுந்ததுளம்; எழுந்ததுணர் வுன்னுள்!
மயற்கையிலா துணர்ந்தவை, நீ மற்றவர்க்கும் உரைப்பாய்!
மற்றவற்றால் விளைவதெலாம் உலகமன்றோ துய்க்கும்!
செயற்கையன்றோ நின்கடமை! விளைவவனுக் கன்றோ!
செயலுக்கொரு கருவியன்றோ நின்னுருவும் அறிவும்!
முயற்கையால் முழுநிலமும் அளந்துமுழங் காண
முயல்வதுகாண் நீவிளைவை அளந்திடுமந் நோக்கம்!

பாவெழுத உணர்வமைத்தேன்; பாடலுன்றன் செய்கை!
படித்துணர அறிவமைத்தேன்; படிப்பதுநின் கடமை!
நாவெழுதும் உரையமைத்தேன்; நாற்புறமுஞ் சென்று
நாட்டுநலம் மக்கள்நலம் அறிவுநலம் பற்றி
யாவருக்கும் உரைதரவுங் கட்டளைநான் இட்டேன்!
யாதுவிளை வென்றறிதல் நின்மிகுந்த செய்கை!
பூவிருக்கும் நிலையினிலே கனியறிதல் உண்டோ?
பூமணமும் வேறதனின் கனிச்சுவையும் வேறாம்!

என்னருமைச் சிறுசுடரே! திருவுடலே! செயலே!
எவ்விளைவும் கருதற்க! செய்கவுன்றன் வினையே!
நின்னருமைச் சிறுவினையால் விளைவுபல வாகும்!
நின்விளைவை நீயறிதல் நீளுலகில் இல்லை!
பொன்னருமை பொன்னறிவ தில்லையன்றோ? வாழ்வுப்
பொழுதெல்லாம் நின்னுணர்வால் பொழிந்திடுக! என்றும்
நின்னிலையில் தாழற்க! கவலற்க! உலகில்
நிகழ்த்தவெண்ணும் பலவிளைவுகள் நின்விளைவும் ஒன்றே!

தூய்மையுளம்; தூய்மையுரை; தூய்மைவினை; என்றும்
துவள்தலிலா ஒருநிலைக்கே நினையிருத்திக் கொண்டால்
வாய்மைநிலை வாய்ப்பதல்லால் வேறுநிலை யில்லை;
வறுமைநிலை என்பவெல்லாம் வெறுமைநிலை யாகா!
தேய்தல்நிலை யில்லை; உளம் தீங்குறுதல் இல்லை!
தெருள்நிலையும் தோன்றிவரும் மருள்நிலைமாய்ந் தக்கால்!
ஓய்தல்நிலை யற்றொருகால் சாய்தல்நிலை யில்லா
துழைத்திடுக; உழைத்திடுக; விளைவுபல கோடி!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/147&oldid=1445415" இலிருந்து மீள்விக்கப்பட்டது