இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
126 ☐ கனிச்சாறு – ஆறாம் தொகுதி
மனத்தில் இனிப்பது வாயினில் புளிக்கும்!
மாலையில் புளிப்பது காலையில் இனிக்கும்
சினத்தில் கசப்பது சிரிக்கையில் இனிக்கும்!
சிந்தனைக் கினிப்பது செயலிடைக் கசக்கும்!
உடலுக் கினிப்பது உளத்தினில் புளிக்கும்!
உளத்திற் கினிப்பதோ அறிவினில் கசக்கும்!
கெடலும் நலமும் உடல், அறி(வு), உள்ளம்!
கீழ்மேல் என்பதோ இடம், பொருள், ஏவல்!
துன்பம் வருகையில் நமக்கமைந் திருக்கும்
துயரமி லாப்பிற நிலைகளால் மகிழ்க!
இன்பம் பெறுகையில் நமக்கமைந் திருக்கும்
இன்பமி லாப்பிற நிலைகளால் அடங்குக!
-1977