பாவலரேறு பெருஞ்சித்திரனார்
க௫
கனிச்சாறு ஆறாம் தொகுதி
(காதல், இயற்கை, இறைமை)
பாடல் விளக்கக் குறிப்புகள்
–––––
–காதல்–
1. தன் நாணத்தை விட்டுத் தன் காதலைக் காதலனுக்குத் தோழிவழி செய்தியாக அனுப்பினாள் ஒருத்தி. இவ்வாறு துணிவது தீமையும் பயக்கும் என்னும் உலகியல் உண்மையைக் கூறி அவள் காதலையும் ஏற்றுக் கொண்டான் அவன்.
2. குளஞ் செல்லும்பொழுது அவளைப் பின்தொடர்ந்தான் அவன். ஏனென்று கேட்க விரும்பினாள் அவள். பின்னர் நடந்தது ஒரு நாடகம். நாடகத்தின் முடிவு இன்பியல்.
3. ‘பல தடைகளை மீறி உங்களைச் சந்திக்க வருகின்றேன்’ என்றிருந்தாள். வந்திருந்தான் அவன். ஆனால் அவள் வரவில்லையே! ஏன் என்று அலமருகிறது அவன் நெஞ்சம். (மேற்கண்ட மூன்று பாடல்களும் பாவலரேறு ஐயா அவர்கள் தம் பதினைந்தாம் அகவையில் எழுதியது)
4. நூற்றுக்கணக்கான மங்கையரைப் பார்க்கின்றான்; ஆனால் அவர்களிடமெல்லாம் அவன் மனம் செல்வதில்லையே, ஏன்? என்று வியக்கின்றான் தலைவன். இதைத்தான் காதல் என்று சொல்வார்களோ என்பது அவன் கேள்வி.
5. பிரிவிற்குப்பின் திரும்பிய தலைவனை எப்படியெல்லாம் வரவேற்று மகிழ்ந்தாள்! அவனும் என்னென்ன குறும்புகள் செய்தான்! வந்தபின் அவனோடு ஊட வேண்டும் என்று கூறியிருந்த தோழிக்கு அவள் அமைதியன்றோ சொல்ல வேண்டியிருந்தது? இப்பாடல் ‘பகுத்தறிவு’ இதழில் வெளிவந்தது.
6. தலைவனிடம் தூது சென்று திரும்பிய தோழியை ‘அவர் சொன்னது என்ன?’ என்று துடிப்புற விளித்துப் பாடுகிறாள் தலைவி.
7. பாவலன் வீட்டில் வறுமை தலைவிரித்தாடுகிறது. பாவலன் மனைவி வறுமைச்சுமை தாளாது அவன் எழுதிய பாடல்தாளை எடுத்துக் கிழித்துப் போட்டு அவனது தூவலைப் பிடுங்கித் தரையில் கீறி அமைதி கொள்கிறாள். ஆசிரியர் 1950-51ஆம் ஆண்டுகளில் வறுமை வயப்பட்டு நின்றபொழுது பாடிய பாடல் இது. கண்ணதாசனின் ‘முல்லை’யில் வெளிவந்தது.
8. அத்தை மகள் ஒருத்திக்கு முத்தமிட்டுக் காதலை மூட்டினான் ஒருவன்! அவன் தந்த முத்தத்தால் அவள் உள்ளத்தில் காதல் முளைத்துக் கிளைத்து மரமாகிப் படர்ந்தது. இந்நிகழ்ச்சியைச் சுவைபடக் கூறுகிறது இப்பாட்டு.