பக்கம்:கனிச்சாறு 6.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

கஎ


20. நெற்றிப் பிறையும், கூந்தலருவியும் அவனுக்கு அழகாகப் படவில்லை. அவளிடம் அவன் சுவைத்த அழகு எது? பாடல் சுவைபட விளக்குகிறது.

21. அவளுடைய பார்வை, அசைவு, சாயல், நாணம், நடை, இதழ்த்துடிப்பு எனும் ஒவ்வொன்றுக்கும் பொருள் உண்டா? ஒவ்வொரு பொருளையும் சுவைபடக் கூறுகின்றன பாட்டடிகள்.

22. நெடுந்தொலைவு பிரிந்து சென்றவனிடம் ‘என்னை நினைக்கும்படி சொல்லாதா இவ்வெரிக்கும் நிலவு’ என்று நினைத்து மறுகுகின்றாள் அவள்.

23. பொருள்தேடச் சென்ற தலைவனின் நினைவு, குடும்பச்சுமை இத்தனையும் தாங்கிக் கொள்ள அவள் நெஞ்சம் அவளிடத்தில் இல்லை என்கிறாள்; உண்மைதான். அஃது அவனையே தொடர்ந்து சென்றுவிட்டதன்றோ? முகிலில் ஏறி வான்வழியே வந்திறங்கிப் பேதை என்னை வாரியணைத்திடுக' என்று உணர்வுத் தூதனுப்புகின்றாள் தலைவி.

24. வில் வளைத்த பாட்டு.

25. தன் தலைவனை நாட்டை மீட்கும் எண்ணத்தில் நாட்டங் கொள்ளச் செய்கிறாள் தலைவி. அவனுக்காக அவள்தான் என்றுங் காத்திருப்பாளே! நாட்டை மீட்கும் பணியில் இருவரும் சாவதை, இருவரும் சேர்ந்து வாழ்வதைவிடப் பெருமையாகக் கருதுகிறாள். இவள் காதல் மறத்திதானே!

26. ‘அத்தான் என்னென்ன குறும்புகள் செய்தான்’ என்று தோழியிடம் கூறி மகிழ்கின்றாள் தலைவி.

27. இயற்கையின் வளமெல்லாம் நம்மைச்சுற்றிச் சூழ்ந்திருக்க நீ ஏன் வந்திணைந்திடாமல் இருந்து நாணுகிறாய்?' என்று தலைவன் கேட்பதான பாடல்.

28. காதற் கனலில் மெழுகாயுருகும் ஒருத்தியின் எண்ணத் தணலை எடுத்தியம்பும் பாடலிது.

29. ஏழ்மை அவளிடத்திலிருந்த அழகையெல்லாம் தின்னுகிறது. ஆனால் அவளும் ஒரு தலைவனுக்காக ஏங்கிடும் ஒரு பெண்தானே. அவளைப் பற்றிய அவல வரிகள் இவை.

30. மாமி செய்கின்ற கொடுமைகளைக் கணவன்முன் சினப்பட்டுப்பேச, அவளை அமைவுபடுத்திக்கேட்ட கணவனிடம் ‘இக்கால அழகு இது’ என்றாள்.

31. அரசு ஊழியர் குடும்பத்தின் மாதக்கடைசி நாள்கள் எப்படியிருக்கும் என்பது பற்றிய ஒரு நகையோவியம் இது.

32. தமிழ்நெஞ்சமாய் இருக்கும் அன்புரு நெஞ்சத்தினனை எண்ணித் தலைவி பாடுவதான இனிய பாடல்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/18&oldid=1445061" இலிருந்து மீள்விக்கப்பட்டது