பக்கம்:கனிச்சாறு 6.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கஅ

கனிச்சாறு ஆறாம் தொகுதி


33. இறந்துவிட்ட தன் அன்புத் துணையாளின் இன்ப நினைவைச் சொல்லி ஏக்கமுறும் பாடல்.

34. ‘அவரைப் பிரிந்த தனிமை இவ்வளவு கொடியதாக உள்ளது.’ தலைவனுக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டு அவனை அனுப்பியபின் உள்ளம் நோகின்றாள் அவள். ‘தென்றலில்’ வெளிவந்த பாடலிது.

35. ‘திருமணம் என்றைக்கு? என்று கேட்டு எழுதியிருந்தீர்கள். அன்னை நாட்டின் அழகு விடுதலை முன்னை வேண்டுக; மூச்சிருந்தால் பிறகு இப் பெண்ணை வந்து தீண்டுக’ என்று பேசுகின்றாள் தலைவி. தூய தமிழ்ப் பெண்ணல்லவோ இவள்! பாவேந்தரின் ‘குயில்’ இதழில் வெளிவந்தது.

36. திடுமென ஒருநாள் காதலியிடம் சொல்லாமல் மறைந்து போனான் தலைவன். தேடித் தேம்பினாள்; வாடிக்குலைந்தாள். இறுதியில் அவனிடமிருந்து ஒரு மடல் வந்தது. “தமிழ்நாட்டை மீட்கப் படையில் சேர்ந்துள்ளேன். முடிந்தால் நீயும் வா!” என்பது அம் மடல். ‘தென்றல்’ இதழில் வெளிவந்தது.

37. 1956-இல் தமிழகத்தின் தென்பகுதியில் அடித்த புயலால் சில நிலப்பகுதிகள் நீருள் மூழ்கின; பல ஏழைக் குடும்பங்கள் துன்புற்று வாடின. பலர் ஏதிலிகளாக்கப்பட்டனர். புயலுள் மாய்ந்த தலைவனை எண்ணித் தலைவி தன் குழந்தைகளுடன் மறுகும் அவலக் காட்சி இது. ‘தமிழ்நாடு’ ஞாயிறு மலரில் வந்தது.

38. தனக்குக் குழந்தை பிறந்த செய்தியை வெளியூரில் உள்ள தலைவனுக்குத் ‘தித்திக்கும் ஒரு செய்தி’ என்று மடல்வழித் தெரிவிக்கின்றாள் தலைவி. குழந்தைக்குத் ‘தனிக்குன்றச் செந்தோளைக் காட்டுதற்குத் தடம் பார்த்துக் கிடக்கின்றேன், வாருங்கள்’ என்று அழைப்பு விடுகின்றாள் அவள். கண்ணதாசனின் ‘தென்றல்’ இதழில் வெளிவந்தது.

39. மனைவியை இழந்தான் ஒருவனிடம், முதியவர் ஒருவர்க்கு மூன்றாவதாக வாய்த்த இளம்மனைவி தன் உள்ளத்து ஆசைகளைக் கொட்டியளக்கின்றாள். இருவரும் ஒட்டுமாங்கன்றினைப்போல் வாழ்ந்தாலென்ன என்று அவன் உளவு கேட்கிறான். கண்ணதாசனின் முல்லை'யில் வெளிவந்தது.

40. சிறு அகவைப் பொழுதில் குளிர்ந்து மகிழ்வித்த நிலவு பருவமுற்றபின் கொதிப்பதேன்? என்று முனிந்து காய்கிறாள் தலைவி. பாவேந்தரின் ‘குயிலில்’ வெளிவந்தது.

41. தலைவியின் பிரிவு அவலத்தைத் தோழி தலைவனிடம் நெஞ்சுருகுமாறு எடுத்துச் சொல்லி அவனைத் தலைவியோடு தலைக்கூடும்படி செய்கிறாள். அவளன்பை வியந்து பாராட்டுகின்றாள் தலைவி. ‘வானம்பாடி’யில் வெளிவந்தது.

42.கைக்கு எட்டாத கற்பனைக் காதலியை உணர்வு வரிகளால் ஓவியப்படுத்தியிருக்கிறது இப்பாடல்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/19&oldid=1445063" இலிருந்து மீள்விக்கப்பட்டது