பக்கம்:கனிச்சாறு 6.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


சென்றவள் மீண்டும் வந்து
செய்தியைச் சொன்னாள்; சின்னக்
குன்றினை இரண்டு தோளாய்க்
கொண்டவன்; என்னுள் ளத்தை
வென்றவன்; நெஞ்சில் என்றும்
விலகாமல் எழிலைக் காட்டி
நின்றவன் மறுத்தான்; என்னை
நெருப்பினில் தூக்கிப் போட்டான்! 5

“பானையில் உள்ள பால்போய்ப்
‘பருகெ’ன அழைத்தும், வாராப்
பூனையைக் கண்ட தில்லை;
பூவோ,தன் னிடையில் தங்கும்
தேனைவந் துண, அ ழைத்தும்
திரும்பிய தும்பி யில்லை;
ஏனைய பொருளு மவ்வா
றிருந்திட மறுத்த தேனோ? 6

கனியொன்று விழைந்தும் வாராக்
கிள்ளையைக் கண்ட தில்லை;
இனிமைச்செந் தமிழில் யாழ்செய்
இசையினை வேண்டா தார்யார்?
தனிமையில் அவனுக் கின்பம்
துளியேதவ் வாறி ருக்கக்
கனியிதழ் வேண்டா மென்று
கழறிய தேனோ, காணேன்!” 7

வாய்விட்டு மேலே சொன்ன
வாறெலாஞ் சொல்ல, தோழி
வாய்விட்டுச் சிரித்தாள் “என்கண்
வடித்தநீர் உலரும் முன்னே
போய்விட்டு வந்தாய் தோழி,
பொய்நீக்கி மெய்சொல்” என்று
காய்விட்டுக் கனிகண் டாற்போல்
கெஞ்சினேன்; இதனைச் சொன்னாள், ; 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/30&oldid=1445077" இலிருந்து மீள்விக்கப்பட்டது