பக்கம்:கனிச்சாறு 6.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  7


முத்தெடுத்துக் கோத்தாற்போல் அரும்புப் பாளை,
முடிச்சிட்ட பொற்பதக்கக் குரும்பு தொங்க;
கொத்தாகக் குலையாகக் காய்கள் ஈனும்
குளிர்தென்னஞ் சோலைவழிச் சென்றே, மீனை
எத்தாகக் கொத்திடவே நாரை நிற்கும்
எழிற்குளத்தின் புனல்மொண்டு வந்தேன், தோழி,
பித்தாக என்னையவன் நோக்கி, ஏனோ
பிதற்றுவான் போல் ஏதோ சொல்லல் வேண்டும்? 5

வான்விரித்த வாறிருக்குந் தென்னந் தோப்பின்
வழிநடந்தே, அல்லி மலர் வண்டு குந்த,
தேன் சொரியும்; குளஞ்சென்றே புனலை மொண்டு
திரும்புங்கா லெனைவளைத்துத் தடுத்துப் பின்னை
ஏன்சிரித்தான்? தோழி, அவன் என்பேர் கேட்டான்,
'இருவாட்சி' என்றேனா, உடனே என்னை,
'மான்' என்றான்: 'மயில்' என்றான்; 'மலரே' என்றான்;
மறுநொடியில் கைநீட்டித் தொடலேன் வேண்டும்? 6

தொட்டகை நடுங்கிற்று! நடுங்கிற் றுள்ளம்!
தோளில் அவன் கைவீழக் குடத்தை விட்டேன்.
விட்டகுடம் விழுந்ததவன் காலில்; நானோ
வெடுக்குற்றேன்; தோழி, என்நெஞ்சை ஏதோ
தொட்டிழுக்கக் கீழ்க்குனிந்தே அவன்கால் தொட்டேன்;
துணுக்குற்றான்; ஆயினும் என் உயிரைத் தன்பால்
கட்டியிழுப் பதுபோன்றோர் பார்வை சிந்திக்,
கண்ணீரைத் தான்விட்(டு)ஏன் வருந்தல் வேண்டும்? 7

'பிழை செய்தேன்' என்றான்; நான் 'இல்லை' என்றேன்.
“பின்னென்ன செய்தேன்நான்?' என்றான் மீண்டும்!
'பிழை செய்யத் தூண்டினீர் அன்றோ?" என்றேன்.
பின்னலினைத் தொட்டிழுத்து முகத்தை ஏந்தி,
‘தழைக அன்பு இன்றுமுதல்; அதற்கு வித்தைத்
தருகின்றேன்' என்றியம்பிக் கூந்தல் நீவி,
மழை போலும் சொரிந்திட்டான் முத்தம்; காதல்
மடைதிறந்து விட்டவன் ஏன் மறத்தல் வேண்டும்? 8

-1948
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/33&oldid=1424648" இலிருந்து மீள்விக்கப்பட்டது