பக்கம்:கனிச்சாறு 6.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  11


5

என் துயர் தீர்ப்பாயடி!


நெடுநாள் மறந்தவன் இன்று வந்தென்னைத்
தொடுகையில் மறத்தே னடி ! - இன்பப்
படுகையில் வீழ்ந்தே னடி!

தேடியலுத்தவன் போல் வந்து நின்றான்
ஓடியொளிந்தே னடி! - முகம்
வாடிக் குலைந்தா னடி!

பூசிய அகிலொடு வந்து நின்றான் என்றன்
ஆசை மிகுந்த தடி! - கடிந்து
பேச மறந்தே னடி!

பின்வந்து கண்பொத்த நாணிநின்றேன்; அவன்
அன்பாய் அணைத்தா னடி! - நல்
இன்பத்தைத் தந்தா னடி!

காடு கமழ்ந்ததே என்றான்; என்னுளம்
ஏடு வரைந்த தடி! - பெற்ற
வீடு மறந்தே னடி!

முல்லை சிரித்ததே என்றான்; என்னுள்ளம்
தொல்லை மறந்த தடி! - இன்ப
எல்லை கடந்தே னடி!

தாமரை பூத்ததென் றானிரு கன்னங்கள்
ஆமென நாணிற் றடி! - வாய்
போமென ஊடிற் றடி!

நெற்றி வியர்த்ததே என்றான்; என்முகம்
ஒற்றி மகிழ்ந் தானடி! - நின்ற
பெற்றி குலைந்தே னடி!

சென்ற திசைகளி லுன்முகம் கண்டேன்
என்று மகிழ்ந்தா னடி! - அன்பை
வென்று கிடந்தே னடி!

வந்தவன் செல்வேனான் என்றா னென்னுளம்
வெந்து மடிந்த தடி! - தோழி
எந்துயர் தீர்ப்பா யடி!

-1950
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/37&oldid=1445083" இலிருந்து மீள்விக்கப்பட்டது