பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 11
6
என்னடி சொன்னாரவர்?
என்னடி சொன்னார் அவர்,தோழி
என்னடி சொன்னார் அவர்?
தன்னடி பெயராமல் இருப்பவர்க்கே இந்த,
தையலைப் பற்றி நீ சொல்லிடச் சொல்லிட
(என்னடி)
முன்னொரு நாளவர் புன்னை மரத்தடி
மொழிந்ததும், நாட்கள் கழிந்ததும், கூறியிவ்
வண்ணம் அவரிலா துடலுயிர் சோர்ந்ததும்,
அன்றே மறந்தவர்க் கின்று நீ சொன்னதும்,
(என்னடி)
ஊமையன் கண்ட கனவது போலவே
உள்ளத் தமைந்தவர் காதல் வளர்த்தபின்,
ஆமை விரைவதும் காணா திருப்பவர்க்(கு)
ஆயிழை மேனி குலைந்ததைச் சொன்னதும்,
(என்னடி)
வந்தவன் ஒருவற்கென் அன்னை சொல் அளித்ததும்,
வங்கத்து வணிகனுக் கென்தந்தை இசைந்ததும்,
சிந்தனை யற்றவர்க் கியம்பி, இச் சிட்டங்கு
சிறகடித்தே வர இருப்பதைச் சொன்னதும்,
(என்னடி)
ஒளிநீங்கும் வானத்தை இருள்வந்து தழுவ,
ஊர் மக்கள் துயில்போன ஒருநொடியில் இந்தக்
கிளிவந்து தங்கும், அக் கொன்றை மரத்தடியில்
காத்திருக்க நான்சொன்ன
கதையினைச் சொன்னதும்
(என்னடி)
-1951