பக்கம்:கனிச்சாறு 6.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  13


7

விளைந்த பாடல்!


என்னை எழுதென்றே என்னுளத்தி லோருணர்வு
பின்னலிடுங் காலை பெருந்தூவல் தாளுமெடுத்(து)
ஆழ்ந்த நினைவோ டமர்ந்திருக்க, என்மனைவி
வாழ்ந்த கதைபாடி வாழ்நிலையைப் பாட
எதிர்வந்து பலவா றியம்பிப் புலம்பிச் 5
சதிராடி நின்றென் செவிவருந்தச் சொன்னாள்:

“அரிசியில்லை என்றேனே; ஆர்கேட்டார்? வாய்க்கோர்
‘சுவை’யுள்ள பண்டமென ஒன்றுண்டா? மேலுக்கோர்
சட்டைத் துணியில்லை; நேர்வீட்டுக் காரியிடம்
கட்டையொன்று கேட்டுக்
‘கணக்குவைத்துக் கொள்’,என்றேன்! 10
‘வாங்கியுள்ள கட்டை வருதற்குள் வல்லுயிரைத்
தாங்கியுள்ள கட்டையுடல் தான்வேகும்’ என்றாள்!
குடிக்கூலிக் காரன் கொடுஞ்சினத்தோ டென்னை
நடைக்கூலி கேட்டான். ‘நாலுழக்குப் பால்தந்த
பின்என்றன் மாடுமிங்குப் போட்டதிரு கன்’றென்றே
சொன்னான், தெருவதிரப் பால்காரச் சொக்கன்.
எருவாட்டிக் காரியுந்தான் இன்றுவந்தாள்; ‘அம்மா
வெந்தபணம் தேடாமல் வீடுவந்து சேரு’ மென்றாள்.
முந்தாநாள் வாய்கிழிந்த மோர்க்காரி இன்றுவந்தே,
‘இந்தாம்மா, கத்திக் கடைவாய் கிழிந்ததினி 20
இல்லையென்று கூறுகின்ற வாய்கிழிப்பேன்’ என்றபடி,
கூரை கிழிவதுபோல் கூத்தாடிப் பின்சென்றாள்,
ஆரைப் பணிந்துபோ என்றுரைப்பேன்; நாளொன்றா?
காலை எழுச்சி கடன்காரன் பாடுகின்றான்;
மாலை விழுந்தாலோ மாபாடல் பேசுகின்றீர்!
அப்பப்பா! நானென்ன ஆளா? அடிபோன
கொப்பா? குரங்கா? குமரிப்பெண் தானே!

பொறுப்பேனா? மற்றவரைப் போல்தானே நானும்;
இருக்காதா ஆசை? இருந்துநான் பெற்றதென்ன?
உங்களுக்கு நான்மனைவி என்னும்பேர் ஒன்றல்லால் 30
பொங்கலுக்குப் பொங்கலன் றாகிலுமோர் புத்தாடை
கண்டேனோ? இல்லையே! காரம் இனிப்பெனவே
உண்டேனா? இல்லையே! ஊரார் உணராரா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/39&oldid=1445085" இலிருந்து மீள்விக்கப்பட்டது