பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 15
8
முத்த வித்து!
அத்தைக் கொரே மகள் உண்டு -அவள்
ஆன எழிற்கு உருவாக இருந்தாள்!
முத்தைச் சொன்னால் அவள் பல்லாய் - அதில்
மூத்த கள் ளூறுதல் எங்ஙனும் உண்டோ?
கத்துங் குயிலிசை தன்னில் - இளங்
காதல் மயக்கந்தான் மூளுதல் உண்டோ?
பித்துப் பிடித்தவன் போல இளம்
பேட்டினை அன்றொரு நாளில் வளைத்தேன்.
1
“கொத்தும் என் உள்ளத்தைப் பாராய் - அது
கூறும் மருந்தினை நீவந்து தாராய்!
செத்துக் கொண்டேவரு கின்றேன் - உடல்
தென்பு குறைந்ததென் அண்டையில் நில்” லெனப்
புத்தம் புதுவுரை சொன்னேன் - அவள்
“போவீர்; மருத்துவர் தம்மிடம் சொல்வீர்;
தொத்திக் கொள்ளும் கொடுநோயோ! - பெருந்
தீப்பிணியோ அத்தான்” என்றாள்; வியந்தேன்!
2
“இல்லையடி, கிளிப் பெண்ணே! - இது
யாராலும் தீர்க்காத நோக்காடாம்” என்றேன்.
“தொல்லையத்தான் மிகத் தொல்லை - பெருஞ்
சாக்காடு தான்; சுடு காடுதான்” என்றாள்!
“முல்லைப் பெண்ணே! உன்றன் பார்வை - எழில்
மூண்டென் உடல்வந்து தீண்டிய நோயை
சொல்லில் விளக்குவ துண்டோ? - அடிச்
சொல்க” வென்றேன்; புரி யாதவள் நின்றாள்!
3
“தந்தை இவரெனச் சொன்னாள் - என்
தாய்; இந்த நோயினைச் சொல்ல மறந்தாள்.
முந்தை மொழியறி வித்தார்; - இதை
மொழியாமல் தந்தைஏன் மூடி மறைத்தார்?
வந்தும் அறிந்திடக் காணேன்! - உமை
வாட்டிய நோயினுக் கென்பெயர்?” என்றாள்;
சொந்தம் பயின்றதென் உள்ளம்! - வாய்
சொன்னது ‘காதல்’ எனுங்கனிச் சொல்லை!
4