பக்கம்:கனிச்சாறு 6.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


12

உள்ள அழகு!


மாங்குயில் இசைகேட் டென்செவி மகிழும்;
மங்கை உன் பேச்செனக் கேனோ?
தூங்கொளி குளிர்நில வென்னுளம் மலர்த்தும்;
தோகை உன் முகமெனக் கேனோ?

பசுந்தமிழ்ப் பாடலில் என்வாய் இனிக்கும்;
பாவை உன் இதழ்எனக் கேனோ?
விசும்பிடைக் கருமுகில் எழில்நிறங் காட்டும்;
வீழ்க்கருங் குழல் எனக்கேனோ?

தாமரை முகைமலர்ந் தெனக்குவப் பூட்டும்;
தழல் எனும் இருவிழி ஏனோ?
பூமண மேவிய தென்றல்வந் தணைக்கும்;
பூவை உன் உடல் எனக் கேனோ?

பெருங்கிளை தழுவிய கொடி மகிழ் வூட்டும்;
பேதை நின் இடை எனக் கேனோ?
மருங்கொடிந் தொளிர் வான் வில்உவப் பூட்டும்;
மடந்தை உன் உருவெனக் கேனோ?

தோன்றும் உன் அழகெலாம் வேண்டுதற் குன்னைத்
துணையெனக் கொள்ளுதற் கில்லை;
ஊன்றிடும் மகிழ்விற் குள்ளத்தின் அழகே,
உன்னுடன் யான்பெறல் வேண்டும்!

-1952
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/46&oldid=1445095" இலிருந்து மீள்விக்கப்பட்டது