பக்கம்:கனிச்சாறு 6.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


16

காணேன் தோழி!


காணேன் தோழி! காணேன் தோழி!
வானம் வெளுத்த நிலையினிற் சென்றான்
வானம் பழுத் தேயிருட் டிய தின்னும் (காணேன்)

கட்டு மரத்தினை யவிழ்த்தான்; கடலுள்
விட்டவன் வலையினை வாரித் தழுவி
நட்ட நடுக் கடல் சென்றவன் என்னைத்
தொட்டணைத் திடுதற் கின்னும் வரக் (காணேன்)

நேற்றிப் பொழுதில் வந்தான்; இன்பம்
ஊற்றிய ளித்தான்; ஆற்றா தென்னைத்
தேற்றிச் சென்றவன் வந்தென் உடலை
ஏற்றெனக் கின்பம் அருளுதற் கின்னும் (காணேன்)

அல்லி தவிப்பதை ஆற்றுதற் கென்று
வெள்ளி நிலவது வந்தது தோழி!
மெல்லியள் என்னை தேற்றுதற் கேற்ற
வல்லவன் கடல்விட் டின்னும் திரும்பக் (காணேன்)

மங்கிய இருளில் வலையினை ஏந்திப்
பொங்கிய கடலுட் புகுந்தான் தோழி!
திங்களும் வந்தது! தனக்கென நிற்கும்
மங்கை யொருத்தி நினைவிலா தவனைக் (காணேன்)

“வீங்கிய தோள்கள் துடுப்பால் நீரை
வாங்கும்; உள்ளம் உன் நினை வாலே
ஏங்கும்,” என்றே நாளுஞ் சொல்பவன்;
தாங்கா தென்னுயிர்த் தாங்குதற் கின்னும் (காணேன்)

“வீசும் வலையினைக் கைகள்; நெஞ்சம்
பேசும் உன்னிடம் அடிக்கடி” என்றே
நேசங் கொண்டவன் போலப் பேசியே
மோசஞ் செய்தவன் கூட்டில் வந்தடையக் (காணேன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/52&oldid=1445102" இலிருந்து மீள்விக்கப்பட்டது