பக்கம்:கனிச்சாறு 6.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


21

நானும் அவளும்!


அவள் விழிகள் வந்தென்னைப்
பார்த்தபடி ஏங்கும்;
அப்பார்வை என்னுயிரை
உடலினின்று வாங்கும்,
சிவந்த இதழ்தன்னை எழில்
ஒருபுறத்தே சாய்க்கும்;
சித்திரத்தின் சாயல் வந்தே
என்னுடலை மாய்க்கும்.
கவின்முழுதும் அவளினிரு
கன்னங்களில் பூக்கும்;
கதுப்பின் எழில் நொடிக்கு நொடி
என்னுளத்தைத் தாக்கும்.
செவிப் புறத்தில் சுருண்டகுழல்
காற்றில், அசைந் தாடும்;
செய்வதறி யாதெனுளம்
கண்டுகண்டு வாடும்!

சாய்த்தபடி பார்த்தவிழி
என்னென்னவோ உரைக்கும்;
சாகாத எண்ணம் வந்தென்
உடலைநாளுங் குறைக்கும்,
தோய்த்த எழில் வந்தெனது நடையைக்
கொஞ்சம் நிறுத்தும்;
தோகையுடல் என்னுளத்தில்
நாளும் வந்தே உறுத்தும்.
வாய்த்தபொழு தத்துணையும்
பார்ப்பதாலே ஒழியும்;
வாய்கள் பேச முந்துதற்குள்
எண்ணிலா நாள் கழியும்,
வேய்த்தோளைத் தழுவுதற்கென் கைகள்
நாளுந் துடிக்கும்;
வெண்ணிலவைக் கண்டதுமென்
உள்ளம்நிற்கா தடிக்கும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/58&oldid=1445111" இலிருந்து மீள்விக்கப்பட்டது