இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34 ☐ கனிச்சாறு – ஆறாம் தொகுதி
நானும் அவளும் மலரும், மணமும்!
நிலவும் நீல வானும்!
நல்ல ஆவைக் கறந்து வைத்த
பாலும் கொம்புத் தேனும்!
மானும், மயிலும்; குளமும் புனலும்;
யாழும் பேசும் இசையும்;
மாலைப் பரிதி வீழும் செம்மை
நிறமும், மேலைத் திசையும்!
ஊனும் உயிரும்; ஒழுகு கன்னற்
சாறும் வெல்லச் சுவையும்;
உதவு மழையும், முதுமை விளைவிற்
குவியும் நெல்லின் குவையும்
ஞானத் தமிழும், திருவும்; கண்ணும்
ஒளியும் போல முடிவில்,
இன்பங் காண முயற்சி செய்வோம்
இருவர் பிடித்த பிடியில்!
-1954