பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 35
22
நிலவு சொல்லாதா?
கன்னியை எண்ணாரோ? - காதல்
கனியை உண்ணாரோ?
காத்துக் கிடக்கும் யாழை மீட்டி
இசைக்கப் பண்ணாரோ? - இன்பம்
பிசைந்து தின்னாரோ?
என்னை வெறுத்தாரோ? - இல்லை
எண்ண மறுத்தாரோ?
ஏங்கிக் கிடக்கும் கிளியைத் தூக்கி
இணை நிறுத்தாரோ? - முகத்தை
எதிர் நிறுத்தாரோ?
மறந்து போவாரோ? - இங்குப்
பறந்து மேவாரோ?
மங்கை யிருக்க ஒருத்தியைப் போய்
மணந்து நோவாரோ? - என்
மடியில் தாவாரோ?
இரவு சொல்லாதா? - அன்றை
இரவு சொல்லாதா?
இளைக்க இளைக்க இன்பம் விளைத்த
உறவு வெல்லாதா? - காதல்
உறவு வெல்லாதா?
நிலவு கொல்லாதா? - எரிக்கும்
நிலவு கொல்லாதா?
நித்திலப் படுக்கை விரித்துக் கொடுத்த
நிலவு கொல்லாதா? - எனை
நெருக்கத் தள்ளாதா?
தேரில் வருவாரோ? - முத்தம்
நேரில் பெறுவாரோ?
தேடித்தேடி அலையும் விழிக்குத்
துன்பந் தருவாரோ? - இல்லை
இன்பந் தருவாரோ?
-1954