பக்கம்:கனிச்சாறு 6.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


25

காதல் மறத்தி!


கோட்டு மலரெனக் கொஞ்சுகின்றீர் - எனைக்
கோல மயிலெனக் கூறுகின்றீர்,உளம்
வாட்டு கின்றாயென ஏங்குகின்றீர் - உங்கள்
வாழ்விற் கிணையெனப் பேசுகின்றீர்!
காட்டுப் புறாவெனத் தீட்டுகின்றீர் - எழுங்
காதல் மொழியினைக் கூட்டுகின்றீர் - தமிழ்
நாட்டு விடுதலைக் கான செய்வீர் - பின்னை
நாட்டங் கொள்வீ ரத்தான் காதலின்மேல்!

சொல்லப் பழக்கிய பைங்கிளி நான் - உமைச்
சேரும் விருப்பினை மாற்றலுண்டோ? எழில்
வெல்லப் பயின்ற நம் காதலினை - இந்த
வேல்விழி மாய்ப்பது மில்லையத்தான்!
கொல்லப் படும்தமிழ்த் தாயினையே - பெருங்
குன்றெனுந் தோள்தந்து காதல்செய்வீர்! - உமைச்
சொல்லப் படும்புகழ்ச் சொற்களுக்கே தனிச்
சொந்தம் என்பாள் உளம் பொங்கட்டுமே!

மாகுன்றத் தோளினைப் பின்னிய நான் - செயல்
மாறுபடல் என்றும் நேர்வதில்லை! - எழிற்
பாகுன்றும் சொற்களைக் கேட்டவள்தான் - இந்தப்
பைங்கிளி! உங்கட்குக் காத்தி ருப்பேன்!
போகின்ற செந்தமிழ்ப் போர்க் களத்தில் விழுப்
புண்படச் சாவீரேல் தானும் வந்தே,உடன்
சாகின்ற தன்மையாள் நானும் அத்தான்! -அன்புச்
செந்நீரால் செந்தமிழ்த் தாயைக் காப்போம்.

-1954
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/64&oldid=1445123" இலிருந்து மீள்விக்கப்பட்டது