பக்கம்:கனிச்சாறு 6.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


“காய்ச்சிய நீருக்குச் சூடில்லை என்பாள்; பின்
காய்ச்சினால் மிகுதி என்பாள்! - என்
தாய்ச்சரி யாக வளர்க்க வில்லை என்பாள்!
தாய்க்கென்ன என்று கேட்டால் - நீ
வாய்க்குச் சரியாகப் பேசுகின்றாய் என்பாள்;
வாது செய்வாள்! - தன்னையே
தாய்க்குச் சரியாகப் பேணவில்லை உம்மைப்
பெற்றவள் என்ற ழுதாள்!

அங்கவள் விக்கி அழுதிட நான்வியந்
தரு குசென் றேயவளைத் தேற்றி
சங்குநாதன் பெற்ற பைங்கொடியே! என்ன
தவறு செய்தேன் ! உன்னையே - உளம்
பொங்கும் நிலையில் மணந்தது குற்றமோ!
புகலுக! என்று சொன்னேன் - அவள்
திங்களெனும் குளிர் முகமலர்ந்தே” அத்தான்
தற்கால அழகீ தென்றாள்!

-1955(?)


31

அரசு ஊழியர் மனைவி!


ஒளிதவழும் முகம்வாடி இருப்பதும் - உன்றன்
ஓரத்து விழிகருகிக் குலைந்ததும்,
குளிர்தவழும் குழல்காய்ந்து பரந்ததும் - அதன்
கொண்டையில் முல்லைமலர் மறைந்ததும்,
நெளிதவழும் இடைசோர்ந்து போனதும் - அதில்
நின்றபழந் துணிஅழுக் கானதும்,
களிதவழும் இதழ்செம்மை மறந்ததும் - மாதக்
கடைசியிதாம் எனவுணர்த்தி நிற்குமே !

தொட்டியின் வெந்நீர்சூ டற்றதும் - சீக்காய்த்
தூள்வைக்கும் கிண்ணம் கவிழ்ந்ததும்,
வட்டிலில் சோற்றளவு குறைந்ததும் - குழம்பில்
வார்க்கின்ற கறிகாய் மறைந்ததும்,
கட்டிசேர் தயிர்மோராய் நீர்த்ததும் - உன்
காதுக் கடுக்கன் கழன்றதும்
அட்டியொன் றில்லையடி நற்பெண்ணே - மாதம்
ஆகிவிட்ட தென்பதனைக் காட்டுமே !

-1955
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/70&oldid=1445134" இலிருந்து மீள்விக்கப்பட்டது