பக்கம்:கனிச்சாறு 6.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  45


32

அன்புருவே வாழ்க! அறநெஞ்சே நீ வாழ்க!


நெஞ்சமெனும் நீள்விசும்பில் நேர்ந்ததொரு மின்கீற்றாய்,
துஞ்சுமொரு நல்லிருளில் தோற்றியதோர் இன்கனவாய்,
கொந்தளிக்கும் அன்புக் குளிர்க்கடலில் நீந்துமெனை
வந்தணைக்கும் நற்றுணையாய் வாய்த்ததோர் அன்புருவே!

உங்கள் தமிழுணர்வும், உண்மை விளைநெஞ்சும்
திங்கட் குளிர்மொழியும், தெள்ளிய நல் லன்புமெனைத்
தீண்டி யுளமுருக்கித் தேங்கியுள்ள பாவுணர்வைக்
கீண்டிச் சிலிர்த்ததையும், கீழ் மேலாய்ச் செய்ததையும்

எண்ணப் பெருநெருப்பில் எண்ணெயிட்டே ஊதியதும்
விண்ணத் தனைஉயரும் வீழாத கற்பனைக்குப்
பக்கச் சிறகமைத்துப் பார்காண விட்டதையும்,
தொக்கக் கருத்தாற்றித் தோணியமைத் தேற்றியதும்,

அன் பூறும் பாலாற்றில் ஆயிரந்தேன் கூடுடைந்தே
இன் பூறுச் செய்ததையும், ஏற்றம் விளைத்ததையும்,
வல் விலங்குக் கூட்டத்தே வாழுமொரு மான்போல
பல்வகையாத் துன்புற்று நெஞ்சம் பதைக்கையிலே

அன்போ டெனையணைந்தே ஆறாத் துயர்களைந்து
முன்புயான் காணாத மொய்க்கும் அருள் சொரிந்து
நாவிளையும் பாட்டையெல்லாம் நாடறியச் செய்வதற்கு
ஆவிதர செந்தமிழை ஆளுகைக்கே உட்படுத்த,

வாக்குக் கொடுத்ததையும், வாழ்விக்க வந்ததையும்
ஏக்கத் துணர்வில் எழுந்துயர்ந்த எண்ணங்களும்,
அன்னைக்கும் அன்னையாய் அத்தனுக்கும் அத்தனாய்,
என்னைச் சூழ்ந் தாட்கொண்ட எல்லவர்க்கும் மேலராய்

உண்மை உணர்ந்தே, உணர்வுணர்ந்தே உண்மையன்பின்
வெள்ளம் உணர்ந்து, விளக்கமெலாந் தாமுணர்ந்து,
நாட்டை யுணர்ந்தென்றன் நாட்டத்தைத் தானுணர்ந்து
கேட்டை யழிக்கக் கிளர்க்கின்ற சொல்லுணர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/71&oldid=1445135" இலிருந்து மீள்விக்கப்பட்டது