பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 47
34
தனிமை கொடிது!
கனியின் சுவையும் கடிமலர்சூழ்க்
காவும், அரைக்கும் சந்தனத்துப்
பனியின் குளிரும், யாழ்கூட்டும்
பண்ணும், ஆப்பாற் பயந்தெடுத்த
இனிமை உணர்வும், ஈன்றவரின்
இன்சொல் யாவும் மிகக்கைக்கும்
தனிமை கொடிதென் றறியாமல்
துறந்தார்க் கீந்தேன் ஒப்புதலே!
கடுக்கும் காம்பென் றெடுத்திதழைக்
கொட்டிப் பரப்பி விரித்தமலர்
படுக்கை வருத்தும், பைந்தமிழ்த்தீம்
பாடல் வெறுக்கும், பைங்கிளிகள்
தொடுக்கும் இன்சொல், தூமேனி
துளியுறுத் தாப்பூந் துகிலும்துயர்
கொடுக்கும் தனிமை கொடிதெனவே
கொள்ளா தீந்தேன் ஒப்புதலே!
தண்ணும் புனல்சேர் மலர்ப்பொய்கை,
தணல்நீக் கிடுமாஞ் சோலைநிழல்,
கண்ணும் குளிர வந்தணைக்கும்
கடிமலர்ப் படுத்த வின்தென்றல்,
துண்ணும் குழலும், தேன்மாவும்
துறக்கச் செய்தே என்னுயிரை
உண்ணுந் தனிமை மிகக்கொடிதென்
றுணரா தீந்தேன் ஒப்புதலே!
மல்லும் ஒளிசேர் பரிதிதரு
மகிழும் இருகாற் பொழுதுகளும்,
புல்லும் உயிர்க்குப் பொலிவூட்டும்
பால்நில வொளியும் வந்தென்னைக்
கொல்லும் கொல்லும் தனிமைமிகக்
கொடிதென் றறியா தெனைவிட்டுச்
செல்லும் அவர்க்கென் இதழ்தந்து
செப்பினன் தோழி ஒப்புதலே!
-1956