50 ☐ கனிச்சாறு – ஆறாம் தொகுதி
37
அன்றில் பேடு!
கத்தரிப் பிஞ்சுகள் சீறிவரும் புயல்
காற்றில் அலைவது போல் - இணை
முத்தரி மாலை யறுந்து விழுந்தபின்
மூலைக்கொன் றோடுதல் போல்,
சித்திர மாயெழில் மூண்ட குழந்தைகள்,
சீர்குலைந் தேங்கிட வோ - நீர்
செத்தழிந் தீர்!உயிர் மேவும் அத்தான்! இனிச்
செய்வ தறிகி லேனே!
ஓங்கும் பசிக்குக் குருதியினை நான்
ஊட்டி வளர்ப்பே னென்றோ - உயிர்
வாங்கிடுங் காலனுக் கென்னுயிர் தந்தவை
வாழுதல் செய்வேன் என்றோ
ஏங்கும் முகங்களுக் கென்முகம் காட்டியே
இன்னுரை செய்வேன் என்றோ - நீர்
தூங்கும் அமைதியைத் தேடிச் சென்றேயெனைத்
‘தேம்புக’ என்று விட்டீர்!
தாவுங் கொடியொரு கொம்பின்றி வாழுதல்
தாளா திருக்கையிலே - அதில்
மேவுங் கனிகளைக் காப்பதெங்ஙன் அத்தான்!
மீளாத் துயருங் கொண்டேன்!
கூவும் குயிலினுக் கெங்கிருந் தோமறு
கூவல் கிடைப்பதைப் போல் - உயிர்
தூவும் மகிழ்வினுக் கானவின்பம் இந்தத்
தொல்லுல கெங்குமில்லை!
மாய்ந்ததை எண்ணி மறுகையிலே - உயிர்
மாய்க்க மனங் கொள்ளுவேன்; - எழில்
வாய்ந்த குழந்தைகள் முன்வந்து நிற்கையில்
வாழ மனங் கொள்ளுவேன்!
காய்ந்த உளம், புனல் தோய்வ தெனச்சுழல்
காலத்தால் மாளுகின்றேன்! - எழில்
வேய்ந்த அத்தான்! உயிர் பாய்ந்த அத்தான்! இனி
வேகத்தால் பின்தொடர் வேன்!
-1956