பக்கம்:கனிச்சாறு 6.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


42

என்னுளத்தில் நீந்துகின்றாய்!


வானத்து நீள்நெஞ்சில் வந்த குளிர்நிலவே!
மீனத் திருச்சுடரில் மின்னுகின்ற பேரொளியே!
ஆவி துடிக்குதடி! அன்புமுகம் எண்ணுதடி!
கூவி அழைக்குதடி! கொவ்வையிதழ் வேட்குதடி!

தொட்டுத் துடிக்கின்ற தோள்களெல்லாம் பூரிக்கக்
கட்டி யணைத்துக் கனியிதழின் தேனுண்டு
மொட்டுச் சிரிக்கும் முல்லை போல் பல்லழுந்தக்
கட்டவிழ்த்துப் போகும் இளங்காளை போல் இன்பத்தே
மூழ்கிக் குளித்து முழுமயக்க நல்லமைதி
சூழுமென எண்ணிச்செந் தமிழே வந்ததில்லை. 10

அன்புத் திருவிளக்கை அழகுக் கயல்விழியும்,
பண்புத் தமிழ்நெறியைப் பாய்ச்சும் பணிமொழியும்
காணாத பெண்மையைக் காட்டுகின்ற நின்நடையும்
பேணாத வாறென்னைப் பேணத் துடிக்கும்
மலர்க்கையும் அழகுத் திருவிரலும், தாமே
உளத்தில் ஒளிகாட்டி உன்னை விரும்புதற்கே
ஈர்த்து வளைத்ததடி! என்னுயிரைத் தின்றதடி!
ஆர்த்தபே ரறிவும் அடிசாய்ந்து வீழ்ந்ததடி!
உன்னை நினைக்கையிலே மேனியெல்லாம் மின்னுதடி!
என்னை அறியாமல் என்னுள்ளந் தாவுதடி! 20
கண்ணில் ஒளிமங்கிக் காட்சி மறையுதடி!
உண்ணுகின்ற சோற்றில் ஒருகவளம் ஏற்காமல்
நாக்குப் புரட்டுதடி! நல்லுடலும் சோர்ந்ததடி!
நோக்குப் பிசகுதடி! நூறுமுறை நோக்குதடி!
கண்ணிமையை மூடிக் கனவிலுனைக் காண்கின்றேன்.
எண்ணி முடிக்குமுன்னம் எங்கோ மறைகின்றாய்!
எட்டிப் பிடிக்க இருகையை நீட்டுகின்றேன்!
கட்டை தென்படவே காணா தலைகின்றேன்!

வந்தேன்; எழிலுருவை வல்லிருளில் யான்கண்டேன்!
செந்தேன் இதழில் சிவப்பொழியத் தேனுண்டேன்! 30
நீண்ட கருங்குழலை நீவி மகிழ்ந்திருந்தேன்!
ஆண்ட கைமலரை அள்ளியள்ளி முத்தமிட்டேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/82&oldid=1445161" இலிருந்து மீள்விக்கப்பட்டது