பக்கம்:கனிச்சாறு 6.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  59


44

மகனே இது கேள்!


மகனே இதுகேள்!
முகம்நிமிர்த்தி அன்னை மொழிந்தாள்; அவள்விழி,
அகம் உயிர் எல்லாம் அழுதுகொண் டிருந்தன!
தண்ணிய கைகளால் நெற்றியைத் தடவிப்
பெண்மையும் தாய்மையும் பிணைந்து பின்னிய
மென்மைக் குரலால் மேலும் என்னிடம்,
“அன்புப் பிள்ளையே! அன்னைநான்; வேறலள்;
உள்ளும் புறமும் உன்னை உணர்ந்தவள்
கள்ளமில் நெஞ்சும் கருத்தும் அறிந்தவள்
அவ்வா றே, நீ எனையும் அறிந்தவன்
எவ்வெத் துறையை யும் நீ படித் திருப்பவன்!
இந்த வகையினில் மட்டும், நீ என்னையும்
தந்தை மொழியையும் தட்டலா காது!
மற்றுநின் தந்தையோ தாமும் மனங்கொண்டு
உற்ற நிலைகளும் உலகமும் காலமும்
ஆர நினைந்தே, ‘அவட்குநீ; உனக்கவள்
வேறு முடிவிலை’ என்று விளம்பினார்.
பெண்ணை ஒருமுறை பார்த்துவா; பின்னர் உன்
எண்ணம் இதுவென எனக்குரை; தந்தைபால்
நானுன் முடிபை நறுக்கெனச் சொல்லி
மானென எவளைநீ மதித்து, ‘மணமுடி’
என்பையோ அவளைநான் ஏற்று முடிக்கிறேன்,
‘என்கண் ணன்றோ?; எழடா செல்வமே’
என்றென் நெஞ்சையும் உடலையும் எழுப்பி,
அன்பால் நிறுத்தினார்; அக்கால் தந்தையும்
என்பால் நெருங்கி, எதிர்வந்து நின்றே

“இதோ,பார் மணிமுடி! இனியநின் நண்பன்
ஏந்தல் தன்னையும் இட்டுப்போ; இருவரும்
நாளை முன்பகல் வண்டியை நாடினால்
பாளையூர் சென்று மாலையே திரும்பலாம்!
பெண்வீட் டாருனைப் பெரிதும் அறிந்துளார்.
கண்போல் உன்றனைக் கருத்தாய்ப் பேணுவர்,
பெண்ணைநீ பார்த்திடல்நன்றெனும் பெற்றியால்
உன்னை வேண்டினோம்; மறுத்திடல் உயர்விலை”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/85&oldid=1445164" இலிருந்து மீள்விக்கப்பட்டது