பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 65
50
காத்திருந்தேன் உங்களுக்கே!
அவள்:
காத்திருந்தேன் உங்களுக்கே!
கண்விழித்தேன் இராப்பகலாய்!
பூத்திருக்கும் முல்லைமலர் இங்கே; - எழில்
பொங்குகின்ற நெஞ்சநினைவெங்கே? 1
அவன்:
தலைநிமிர்த்த நேரமில்லை;
தனிநலத்தில் நாட்டமில்லை;
விலையுரைக்கப் படுந்தமிழை எண்ணி - நெஞ்சம்
வேகுதடி; வேகுதடி; கன்னி!
2
அவள்:
காதலென்ன கல், இரும்பா;
காலமெல்லாம் பூத்திருக்க?
சாதல்வரு முன்னே,இள வேனில் ஒளி
சாம்பிவிட்ட பின்னே,முது வேனில்!
3
அவன்:
பூமணமும் மோப்பதில்லை;
புத்திளமை ஈர்ப்பதில்லை;
நாமணக்கும் தமிழ்த்துயரை எண்ணி உடல்
நாளமெல்லாம் கனன்றதடி கன்னி!
4
அவள்:
முத்தமிழை நோகவில்லை;
முகங்கடுத்துங் கேட்கவில்லை;
முத்தமழை பொழிந்திடலா காதா?,அன்பு
முகைவிரிதல் செந்தமிழ்க்குத் தீதா?
5
அவன்:
அகத்துறைக்குப் பஞ்சமில்லை;
அன்புவளம் கொஞ்சமில்லை;
மிகுத்த துயர் தமிழ்மொழிக்கே இன்று! - துயர்
மீட்டிடவே நாம்முனைதல் நன்று!
6