பக்கம்:கனிச்சாறு 6.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 கனிச்சாறு – ஆறாம் தொகுதி

வந்த புதுப்பெண் வலக்கால் தூக்கிச்
செந்தா மரையடி சிலம்பிடச் சென்று
புதுக்குடி புகுந்தாள்; புகுந்தவள்,
சடக்கெனக் கதவைச் சார்த்திக்கொண் டாளே!


இரண்டாம் நாள்!

 என்னை! ‘எதிர்வீட்டில் எவருளர்’ என்றென்
அன்னை, பார்த்திட, அனுப்பி வைத்தார்!
நான்சிறு பையன்! நடையை அடைந்தேன்!
தானாய்க் கதவின் தாழ்திறந்து கொண்டது!
நிலாமுகம் வெளியே நீட்டிப் பார்த்தது!
உலாவின விழிகள்! உடனே செவ்விதழ் 40
விரிந்தது; முத்துகள் வெள்ளொளி ‘சிதறின’
சரிந்த குழல்எனைச் சாய்த்துக் கேட்டது,
“யார்தம்பி, நீ?” என! “எதிர்வீடு! சும்மா
பார்க்க வந்தேன்” எனவிடை பகர்ந்தேன்!
“அப்படி யா? வா?” அழைப்பு வந்ததும்,
"எப்படி? என்ன?” என்றெலாம் கேட்டு,
விளக்கம் தெரிந்தபின் வீடு வந்தேன்!
அளக்க லாகா இன்பமும் அடைந்தேன்!
அன்னை யிடத்தில் அனைத்தும் சொன்னேன்!
என்னை வீட்டில் இருக்கச் சொல்லி 50
அன்னை சென்றார் அமிழ்தம் வீட்டிற்கு!
என்னிடம் அவள், சொன்ன இன்பெயர் அதுதான்!
அமிழ்தின் கணவர் பள்ளியா சிரியர்!
அமிழ்தம் புதுப்பெண்! திருமணம் ஆகி
மூன்று மாதமே முடிய வில்லையாம்!
தோன்றும் ‘தனிமை’ மிகவும் தொல்லையாம்!
எனவே அவளும் என்றன் அன்னையும்
முணுமுணு வென்றே முழுநாள் பேசுவர்!
பேச்சில் ஒருவரைப் பிடித்தால்
மூச்செலாம் பேச்சாய் முழங்குவார் அன்னையே! 60

3,4,5-ஆம் நாள்கள்!

அமிழ்தமும் அன்னையும் அடிக்கடி இணைந்து

கமழக் கமழப் பேசிக் களித்தனர்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/94&oldid=1445186" இலிருந்து மீள்விக்கப்பட்டது