பக்கம்:கனிச்சாறு 6.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 கனிச்சாறு – ஆறாம் தொகுதி

தனித்தனி யாகத் தாம்வெளிப் பட்டன!
மூன்றாம் வீட்டில் இருந்தவோர் முரடன்,
நான்காம் வீட்டின் நாடக நடிகை, 100
தம்மைப் பற்றியும் தாயார் உரைத்தார்!
எம்மனைச் செய்தியில் ஏற்றம் காட்டினார்!
அமிழ்தம் இவற்றை ஆர்வமாய்க் கேட்டாள்!
குமிழ்ச்சிரிப் பிடையிடைக் குமிழியிட் டோடும்!
குலுங்கக் குலுங்கச் சிரிப்பதும் உண்டு!
இலங்கிய பேச்சால் இன்பம் மிதக்கும்!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில்
எவ்வொரு சிணுக்கும் எழாமல் பேசினர்!
இவ்வாறாகத் தெருவினில் இருந்த
ஒவ்வொரு குடும்பமும் தெறித்ததவ் வுரையில்! 110
பத்து நாட்களும் பறந்தன,
முத்து நகையிலும் பேச்சிலும் முழுகியே!


11 முதல் 19–ஆம் நாள் வரை:

வந்துகொண் டிருந்த அமிழ்தின் வரவு
வெந்த சோற்றின் விரைவடங் கல்போல்
நாளுக் கிரண்டொரு நடையென நலிந்தே,
ஆளுக்குப் பலமுறை அழைப்பு விடுத்தால்,
எப்பொழு தோ,வந்து ‘ஏன்’ எனக் கேட்கும்
மப்பு நிறைந்து மங்கிப் போனது!
தாயார் வருந்தினார் உள்ளமும் தளர்ந்தார்!
நோயால் துன்புறு வாளோ என்றே 120
இவரே அவளிடம் ஏகத் தொடங்கினார்!
அவளப் பொழுதெலாம் ‘அது’ ‘இது’வென்று
வேலை யொன்றில் வேண்டு மென்றே
காலம ராமல் கையம ராமல்
ஈடுபட் டிருப்பதாய் இருப்புக் காட்டினாள்!
வாடிய முகத்துடன் அன்னையும் வருவார்!
“என்ன வந்ததாம், இவளுக்” கென்றும்
“சொன்ன வற்றிலோ சோர்வுறும் படியோ
வருந்தும் படியோ வந்திலை” யென்றும்,
அருந்தும் போதும் அயர்வுறும் போதும் 130
எண்ணினர் அன்னை! ஏங்கி
நண்ணி யிருந்தனர் அவள்வரும் நாளையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/96&oldid=1445190" இலிருந்து மீள்விக்கப்பட்டது