பக்கம்:கனிச்சாறு 6.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


“உன்றனைச் சொல்லவில் லையடி! உலகில்
நன்றுந் தீதுமாய் நடந்திடும்; நாம்தாம்
கண்டு விலகியும், காது கொடாமலும்
உண்டு, இலை எனுமா றொதுங்கி இருந்திடல் 170
வேண்டும் என்றேன்; வீணரின் மனத்தைத்
தூண்டும் நிலையின்றித் தொலைவினில் நாமே
சென்று விட்டால் சிறுமைக் கிடமிலை”.
என்று விளக்கினாள் அன்னை! ‘நன்’றென
அமைந்து சென்றாள் அமிழ்தம்!
குமைந்தார் “உலகம் கொடி”தென் றன்னையே!

30–ஆம் நாள்!

“ஆட்டுக் குட்டி அரிசியைத் தின்ன,
வீட்டுக் கதவைத் திறந்து விட்டே
எங்கே போயினள் என்று போய் நீ, பார்!
அங்கெங் காகிலும் அக்கம்பக் கத்தில் 180
அரட்டை அடிப்பாள் அமிழ்தம்” என்றெனை
விரட்டினார் அன்னை! விரைந்து சென்றே
அண்டை வீட்டிலும் அயலயல் வீட்டிலும்
உண்டா இல்லையா எனவே ஒருமுறைக்
கிருமுறை தேடி, எங்கணும் இன்றி
முரடனின் வீட்டு முன்றிலில் உள்ள
திண்ணையில் அமர்ந்தேன்! தீயவன் அவனும்
திண்ணைமுன் இருந்த திண்டினில் இருந்தான்!
முன் அறைக் கதவு மூடி இருந்தது!
“என்ன செய்தி?”யென் றெனையவன் கேட்டான்! 190
“அமிழ்து,அக் காவைக் காணோம்; அரிசியை
முறத்தினில் இட்டு, முன்றினில் வைத்து, வாய்ப்
புறத்துக் கதவைப் பூட்டாமல் எங்கோ
சென்றிருக் கின்றாள்! அனைவரும் தேடினோம்”
என்றுநான் சொன்னேன்; இதற்குஅம் முரடன்,
“ஓ, ஓ! அந்தப் பெண்ணா? அதோ,இச்
சாலைப் புறத்தினில் சந்தொன் றுளது,பார்,
அவ்வழிச் சென்றதை அரைமணி முன்னர்
இவ்விடத் திருந்துநான் பார்த்தேன்; சென்று,பார்!”
என்று சொன்னான்! ஏனோ நானும் 200
‘நன்’றெனச் சொல்லி நகர்ந்திடா திருந்தேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/98&oldid=1445193" இலிருந்து மீள்விக்கப்பட்டது