பக்கம்:கனிச்சாறு 6.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  73


ஐந்து நிமையம் அமைதியாய் நகர்ந்தது!
இந்தப் பொழுதில் உள்ளறை இருந்தே
“வீட்டிற்குப் போகவா...?” என்றவ் வீணனைக்
கேட்டதங் கொருகுரல்! கிறங்கிற் றென்தலை!
அமிழ்துதான் பேசினாள்! ‘அங்குநான் இலை’யென
அமிழ்தம் எண்ணினாள் போலும்! ஆங்குடன்
அன்னை யிடம்போய், “அமிழ்தம் அக்காள்
என்ன தேடியும், எங்கும் இலை” யெனச்
சொன்னேன்; அன்னையும் சொன்னார்; 210
“இன்னமும் அறியாப் பெண்ணவள்” என்றே!

35–ஆம் நாள்!

கணவன் அமிழ்தை கடுமையாய் அடித்ததும்
கிணற்றில் அவள்விழப் போனதும், கீழ்வீட்டுக்
காரி வந்து காய்வாங்கும் போதில்
நேரில் சொன்னதாய் நிகழ்த்தினார் அன்னை!
பாதையில் பற்பலர் கூடிக்
காதொடு காதாய்க் கசமுச வென்றார்!

40–ஆம் நாள்!

குதிரை வண்டி குலுங்குஞ் சலங்கையோ
டெதிர்வீட்டு முன்றிலில் எடுப்பாய் நின்றது!
வீட்டுப் பொருளெலாம் வண்டிக்கு விரைந்தன! 220
வாட்ட முகத்துடன் கணவனும் வந்து
வண்டியின் முன்புறம் வாகிலா தமர்ந்தான்!
முண்டிக் கொண்டு முளைத்த தலையெலாம்
பலகணி யெங்கும் பதிந்து நின்றன!
விலகிய திரைப்புறம் விழிகள் நீந்தின!
அன்னையும் நானும் அறைக்கத வோரம்
மின்னல் வீச்சுக்கு மிகக்காத் திருந்தோம்!
நடுவீ தியிலே நழுவிய நிலாவெனத்
திடுமென அமிழ்தம் தெரிந்தாள்; மறைந்தாள்!
குதிரைக் குளம்பொலி சதங்கையின் குலுங்கல் 230
அதிர்வினில் சிற்சிலர் நகையொலி அடங்கின!
சூழ்கின்ற பொய்யின் சுவடித்த
வாழ்வை எண்ணி வருந்தினேன் நானே!

-1976
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/99&oldid=1445194" இலிருந்து மீள்விக்கப்பட்டது