பக்கம்:கனிச்சாறு 7.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  4


40

எனக்கொரு கொள்கை!


எனக்கொரு கொள்கை!
எனக்கது கடமை!
என்னுயிர் இயக்கமும் அதற்கே!
தனக்கொரு போக்கைத்
தழுவுவார் என்றன்
தடத்தினில் குறுக்கிடல் எதற்கே?

தமிழ்மொழிக் கென்றன்
தனிமுதல் உழைப்பு!
தமிழின நலம்பெறல் இரண்டு!
தமிழ்நில விடுதலைக்
குழைத்திடல் மூன்று!
தாழ்விலும் கைவிடேன் மிரண்டு!

அரசியல் நன்மை
ஆயிரம் வரினும்
அதன்வழித் துளிநலம் நாடேன்!
முரசென முழங்கி
முனைப்புடன் எழுதி
முழுவுழைப் பளிப்பேன்! வாடேன்!

தனிநலம் நாடும்
அணிகளில் சேரேன்!
தம்செயல் குழுக்களில் இணையேன்!
பனி, குளிர், வெயில், மழை
மானமும் பாரேன்;
பைந்தமிழ், இனநலம் முனைவேன்!

-1983
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/100&oldid=1446094" இலிருந்து மீள்விக்கப்பட்டது