பக்கம்:கனிச்சாறு 7.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


43

தமிழருக் குலகினில் புகழ் சேர்ப்பேன்!


எத்தனை இழிவுகள் பழிகளைக் கூறினும்
என்செயல் நடக்கும் விடமாட்டேன்! - ஒரு
சித்தனைப் போலமுன் பின் உணர்ந் ததனால்
சிறுஅள வதிர்ச்சியும் படமாட்டேன்!
பித்தனைப் போலவும் பேடியர் போலவும்
பிதற்றுவார் தூற்றலுக் குளம் நடுங்கேன்! - ஒளி
முத்தனை தமிழில், இனத்தினில், நாட்டில்
முழுவுளம் பதித்தேன்! வினைஒடுங்கேன்!

தனியனாய் நடப்பினும் தனிவழி போகினும்
தாழ்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் நடைதளரேன் - மிகு
பனியினும் குளிரினும் வெயில்மழை சூழினும்
பதுங்கிட மாட்டேன்; மனம் உலரேன்!
இனியராய்ப் பேசி இழிஞராய் மாறும்
எத்தரை அணுகேன்; நிலைமாறேன்! - ஒரு
முனிவனாய் இருந்து முதுபொருள் உரைப்பேன்!
முதுதமிழ்க் குழைப்பேன்; பழி கூறேன்!

உழைப்பவர் உழைப்பினுக் குறுதுணை யாவேன்!
உலுத்தரை இடித்திடித் துரைதருவேன்! - பிழை
இழைப்பவர் எவரெனி னும்அவர்க் கடிவேன்!
ஏழையர்க் குதவுவார்க் கிணை வருவேன்!
அழைப்பவர் அன்பினுக் கறிவினுக் கடியேன்!
அதிகார ஆளுமைக் கடிபணியேன் - நெறி
பிழைப்பவர் பிழையை நேருற உரைப்பேன்!
பேதையர் பிழைகளை உடன்மறப்பேன்!

இந்தநூற் றாண்டில் இதுதலை முறையில்
எந்தமிழ், இனம், நலம் தன்னுரிமை பெற
வந்துழைத் திடுவார் எவரெனினும் அவர்
வருகையை வாழ்த்துவேன், வரவேற்பேன்!
வெந்துநீ றாயினும் தமிழ்மொழிக் கென்னுயிர்,
விறகுடல் தருவேன்! பொருள் தோற்பேன்! - பலி
தந்தினம் மீட்பேன்! விடுதலை பெறுவேன்!
தமிழருக் குலகினில் புகழ் சேர்ப்பேன்!

-1984
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/103&oldid=1446098" இலிருந்து மீள்விக்கப்பட்டது