பக்கம்:கனிச்சாறு 7.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


47

சூழ்நிலைகளில் நான்!


மற்றவர்க்குச் சொல்லும் போது
என்னையும் நான் நினைக்கிறேன்!
மற்றவரை ஏவும் போது
நானும் இணைந்து செய்கிறேன்!

கற்றவரைக் காணும் போது
கல்லாதன எண்ணுவேன்;
கல்லாதவரைப் பார்க்கும் போது
கற்றவற்றைச் சொல்லுவேன்!

நல்லவரைக் கூடும் போது
நயவுரைகள் கூறுவேன்;
நடிப்பவரைப் பார்க்கும் போது
நாவை உள்ளே வாங்குவேன்!

அல்லவரைக் காணும் போது
அடுத்த இடம் மாறுவேன்;
அன்பர்களைப் பார்க்கும் போது
நெஞ்சைப் பரி மாறுவேன்!

துன்பம் வந்து சூழும் போது
துவண்டு விழுவ தில்லை, நான்!
தோல்வி தொடர்ந்து தாக்கும்போது
தொய்வு கொண்ட தில்லை,தோள்!

இன்பம் கொழித்து வழிந்த போதும்
எக்களித்த தில்லைகாண்!
ஏழ்மை நெருங்கி நின்றபோதும்
இடிந்து போன தில்லையே!
-1986

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/107&oldid=1446103" இலிருந்து மீள்விக்கப்பட்டது