பக்கம்:கனிச்சாறு 7.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


49

வஞ்சகப் பூனைகள்!


வஞ்சகப் பூனைகள் என்பதால் வந்தே
நெஞ்சுரம் மறைத்துச் சிற்சில நேரம்
கொஞ்சியும் அன்பு கொழுவியும் தொண்டினால்
விஞ்சிடும் என்துயர் விளங்கக் கேட்டும்
இரங்குதல் போலும், இனிமேல் துணையாய்
நெருங்க நிற்பது போலும் நெகிழ்ந்துரை
செய்திடும்! இதனைச் சிறப்புற ஒப்பி
எய்யாப் பெருமகிழ் வெய்தி யிருப்பேன்!

ஆனால், ஐயகோ, அவைபுறஞ் சென்று
வீணுரை பரப்பி, வெய்ய உரைத்து - என்
மாண்பினைக் குறைத்திட பற்பல மலவினை
நோன்பெனக் கொண்டு செய்து திரிவதை
எங்கன் தடுத்திடற் கியலும்? இப் பூனைகள்
தங்கள் தங்கள் பிறவிக்குத் தக்க-
குண நிலை பெற்றும் குறுமதி யுற்றும்
உணவுக் காகவும் உயிர்ப்பதற் காகவும்,
இவ்வா றியங்கிடல் இயல்பாய் இருக்க
எவ்வா றிவைதமை மாற்றிடற் கியலும்?

பொதுநிலை வாழ்வெனப் புகுந்தவர் - காயும்
கதிரவன் போன்றவர்! காற்றைப் போன்றவர்!
ஓடும் ஆற்றுநீர் ஒத்தவர்! அவரிடைக்
கூடும் மனங்களைக் கோல்கொண் டளந்தே
இன்னவர் இன்ன தன்மையர் - இவரிடம்
என்ன வாறாய் இயங்குவ தென்றெலாம்
கணக்கிட்டுப் பழகுதல் - கரவொடு பயிலுதல் -
எனக்குக் கைவரா எத்துகள் என்க!

ஆற்று நீரையும் அழற்கதி ரொளியையும்
காற்றையும் அவரவர் கருமத்திற் கேற்பவும்,
அறிநிலை மனநிலை அமைவினுக் கொப்பவும்
நெறிமைப் படுத்துதல் நிகழும் உலகியல்.
இத்தகு நிலையில் அவரவர்க் கேற்ப
ஒத்தியங் குதல்எனக் குதவா தென்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/109&oldid=1446105" இலிருந்து மீள்விக்கப்பட்டது