பக்கம்:கனிச்சாறு 7.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


51

நெருப்பாற்றில் எதிர் நீச்சல்!


நான் மறைந்த பின்தான் - என்
நன்மை வாழ்க்கை தெரியும்
வான்விரியப் புகழ்வார் - வெறும்
வாயரற்றிப் பொழிவார்!

கத்திக் கத்திச் சொன்ன - என்
கருத்தைத் தேடி அலைவார்!
பொத்தகங்கள் ஆய்வார் - வெறும்
புகழ்ச்சிக் கூரை வேய்வார்!

எழுதி எழுதிப் போட்ட - என்
எழுத்தை யாவும் தேடிப்
பழுதில் லாமல் பதித்து - பெரும்
பணங்கள் திரட்டி வாழ்வார்!

பட்டி மன்றம் கூட்டி - என்
பாவும் கருத்தும் தேறி
வெட்டிக் கதைகள் பேசிப் - பல
வேடிக் கைகள் செய்வார்!

நினைவில் நிற்க வேண்டி - என்
நிழற்ப டங்கள், சிலைகள்
புனைவு விழாக்கள் பலவும் - சிலர்
பொழுது போக்க உதவும்!

ஆர வாரம் செய்து - நான்
அப்படி இப்படி என்று
நேரம் கொன்று வாழ்வார் - என்
நிழலைப் பிடிக்க முயல்வார்!

உண்மை தேடி அலைந்தேன் - உயர்
உள்ளம் காண முனைந்தேன்!
கண்கள் இருண்ட தல்லால் - இரு
காலும் சோர்ந்த தல்லால்,

வெண்மை முடிகள் எய்த - உடல்
விறகு போல வற்ற
பெண்மை ஆண்மை வடிவில் - பல
பிறவி உருவம் கண்டேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/111&oldid=1446151" இலிருந்து மீள்விக்கப்பட்டது