பக்கம்:கனிச்சாறு 7.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


இழித்துப் பேசி எழுதி - எனை
இகழ்ந்து தூற்றி நின்றார்!
சுழித்த நெருப்பின் ஆற்றில் - எதிர்
நீச்சல் அடித்துச் சோர்ந்தேன்!

விலைக்குப் பேச வந்தார் - என்
கொள்கை விடுக்கச் சொன்னார்!
வலைக்குள் வீழ வைத்தார்! - என்
வாயைக் கட்டச் சொன்னார்!

கட்சிக் கூண்டில் அடைக்க - என்
கருத்தை மாற்றக் கேட்டார்!
முட்சி தர்ந்த தடத்தில் - எனை
முடுகி நடக்கச் சொன்னார்!

உதவிக் காக எண்ணி - என்
உளத்தை மறைக்கச் சொன்னார்!
பதவிக் காக வென்றே - என்
பணியை மாற்றக் கேட்டார்!

தமிழை எங்ஙன் மறப்பேன் - தமிழ்
இனத்தை எங்ஙன் தவிர்ப்பேன்!
குமிழ்க்கும் நாட்டின் உரிமை - என்
குலையின் துடிப்பே அன்றோ?

என்னைப் புகழ வேண்டாம் - என்
எழுத்தை மதிக்க வேண்டாம்!
கன்னல் தமிழை யன்றோ - நான்
காத்துக் கொள்ளச் சொன்னேன்!

இனத்தை நாட்டை மீட்க - ஓர்
எழுச்சி வேண்டும் என்றேன்!
மனத்தை மானம் தன்னை - உடன்
மாய்த்துக் கொள்ளச் சொல்வார்!

மூச்சைத் தவிர்க்கச் சொன்னால் - ஒரு
நொடியில் மூச்சை முடிப்பேன்! - என்
பேச்சை மாற்றச் சொன்னால் - என்
பிறப்பை மாற்ற வேண்டும்!

-1989
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/113&oldid=1446157" இலிருந்து மீள்விக்கப்பட்டது