பக்கம்:கனிச்சாறு 7.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  71


54

இவர்களில் நானுமா ஒருவன் ?


எடுப்பு


இவர்களில் நானுமா ஒருவன்?
இழிவு! மிக இழிவு!
சுவர்களில் இதுவுமோர் குட்டிச்
சுவர் எனக் கூறுதல்போல். (இவர்களில்)

தொடுப்பு


துவர்முக எரிப்புவிழி, உவர்ப்புரை,
கசப்புளம், புளிப்புநடை,
கவர்வுசெய் இனிப்புநகை,எனவே
திரிந்திடும் கயமையராம். (இவர்களில்)

முடிப்பு


எதற்குநாம் பிறந்தோம், எதற்குநாம்
வாழ்வோம் என நினையாப்
பதர்க்கிணை யானவர் பலபடப்
பேசுவார், பழிநினையார் (இவர்களில்)

அன்பிலே போலியர்; அறிவிலே
மூளியர்; ஆசைகளைத்
துன்பிலே துவட்டித் தொழுவிலே
கட்டிய தொழும்பர்களாம் (இவர்களில்)

வாயிலே சர்க்கரை! கையிலே
தொக்கரை! வழிப்பறிக்கும்
நோயிலே உழன்று கழிசடை
நீரிலே நொதிந்தழியும் (இவர்களில்)

முன்னும் நினையார்! பின்னும்
உணரார்! முங்கிமுங்கித்
தின்னும் வயிறொடும் உடுத்தும்
உடலொடும் திரிபவரே (இவர்களில்)

மன்னும் சீரறி யார், பொதி
மலைச்சதைக் கொழுப்புஒளிச்
சின்னஞ் சிறியர்; சீழ்வடி
நெஞ்சக் கிறுக்கரிவர் (இவர்களில்)

-1992
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/116&oldid=1446164" இலிருந்து மீள்விக்கப்பட்டது