பக்கம்:கனிச்சாறு 7.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80  கனிச்சாறு - ஏழாம் தொகுதி

திருவண் ணாமலைத் திருமண நிகழ்வினை
அருந்துணை ஈக வரசனொடு சென்றே 70
அனைவரும் மகிழ்ந்திட அழகுற நிகழ்த்தி
எனைமேய்ந்த காய்ச்சலோ டில்லம் திரும்பினேன்!

என்நலம் குன்றி இருந்த நாளெலாம்
தென்மொழித் தொண்டும் திருக்குறள் பணியும்
தொய்வுற்றுப் போயின! அலுவல்கள் தொய்ந்தன!
அயராப் பணிசெய் அமைச்சரும் நலமின்றி
அச்சகம் இடையிடை அடைத்துக் கிடந்தது!
எச்ச நாள்களில் ஈகைபோய் வந்தார்!

அறுபத்து மூன்றாம் பிறந்தநாள் மாதம்
மறுபுதுப் பிறவிக்கு மறுவாழ்த்து உரைத்தது! 80

காணாத காய்ச்சலால் களைப்புற் றிருப்பனோ?
பேணாத உடல்நலம் பின்வந்து கூடுமோ?
அசையாத சுடர்விழி அசைவுற் றிருக்குமோ?
இசையாத எஃகுளம் இடர்ப்பட் டிருந்ததோ?
ஐம்பதாண் டாற்றிய அருந்தமிழ்த் தொண்டின்
எம்முடல், உளவுரம் இளைத்தா இருக்கும்?
எண்ணிப் பார்த்திட இயல வில்லை!
திண்ணிய அழுத்தம்! தேற்றிடா மருந்துகள்!

வெம்மை மூச்சில் விடிய விடிய
அம்மா அம்மா அப்பா அப்பா 90
என்றே எனைப்பெற்ற மூலத்தைத் தேடிச்
சென்றே விசும்புவான் முழுவதும் தேடிய
துன்பக் கூவல்கள் கோடி இருக்குமா?

வன்மைசேர் நெஞ்சமும் வலிமைசேர் உடலும்
பெற்ற நானே இவ்வகைப் பிதற்றி
உற்ற நோயினைத் தாங்குகி லாமல்
ஆ ஊ என்றே அரற்றினேன் என்றால்,
சாவிலே வாழும் ஏழ்மைச் சடலங்கள்
என்ன வகையால் இத்துயர் தாங்கும்?
அன்ன காட்சிகள் அடுக்கடுக் காக 100
அறிவில் மனத்தில் ஆடிக்கொண் டிருந்தன!
செறிவான உயிர்க்குள் எனைப்பார்த்துச் சிரித்தன!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/125&oldid=1446174" இலிருந்து மீள்விக்கப்பட்டது