பக்கம்:கனிச்சாறு 7.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  89

தாங்குசுமைக் கல்லென்று தன்னுரிமைப் பேருணர்வால்
எண்ணி முனைந்துவிட்டேன்; ஆக, எடுத்துரைத்தேன்;
நண்ணி எனைவதைத்த நானா வகைத்துயரும்
கூறிவிட வில்லை;நான் கூறியது' காற்பங்கே!

ஏறிவிட்ட துன்பம் எடுத்துரைக்கின் ஐயகோ
வெள்ளிப் பனிமலையோர் வெண்கடுகாம்; பேரலைகள்
துள்ளிக் குதிக்கும் கடலுந் துளியாகும்!
வான்விரிவும் கைக்குள்ளே வந்தடங்கும்; அன்புடையீர்
நானின்ன கூறுங்கால், நெஞ்சம் நகைத்திதனை
மிக்கவுரை என்றுரைக்க வேண்டாம்; மெலிவுளத்தீர்;
தக்கவுரை யன்றாயின் தொக்கவுரை வேறில்லை;
கூறா திருந்ததிலோர் கூறுதான் கேட்டிருப்பீர்,
வேறாக யெண்ணி யிருந்திடிலோ விண்டிருக்கேன்,
நான்பட்ட வெந்துயரை நானே மதிக்கவில்லை,
ஏன்பட்டேன் என்றொருவர் என்னைவந்து கேட்டிடினும்
கூறுதற்கு மாட்டுகிலேன்; ஆயினொன்று கூறிடுவேன்,
ஆருக்குந் தீங்குதனை அன்றுமின்றும் எண்ணவில்லை;
எல்லார்க்கு மின்பத்தை எண்ணியென்றன் இன்பத்தை
இல்லாமற் செய்ததனால் ஐயா,இடர்ப்பெற்றேன்.
ஆன இவற்றிடையில் அன்புமிகு உள்ளத்திற்
கான தொரு நிகழ்ச்சி ஆன்று மதைமறந்தேன்
இத்தனையும் உங்கட்கோ இம்மி விளங்காது,
பித்துரையும் அன்று; இவற்றைப் பின்னுரை னும், உரைப்பேன்,
எத்துணையோ துன்பம் எதிர்ப்பட்டுச் சாய்ந்தாலும்
முத்தமிழ்ப்பாற் கொண்ட முழுப்பற்றில் தீதில்லை;
மூண்ட தழற்கிடையில் மின்னுகின்ற பொன்போல
ஆண்டதமிழ் என்றன் அகத்திலொளி வீசுதையே!
தண்ணீர்ச் சிதர்போலத் தோன்றித் துளியாகி
மண்ணி ஒளிபெற்று மணியாகிக் குன்றாகி
எல்லையறு வானாய் எரிகதிராய், உள்ளத்தே
வல்லாமை யாத்தி வளர்த்ததுவுந் தாய்த்தமிழே!
எள்ளற் சிறுபுழுவாய் இன்பிழந்து நின்றயெனைத்
தள்ளற் கரிதாகத் தந்ததுவும் தாய்த்தமிழே!
என்னை யறியா திருமாந் திருந்தவனைத்
தன்னை யறிவித்துத் தானொளிர்ந்த துந்தமிழே!
அந்தத் தமிழுக் கடிமைநான்; அத்தமிழ்க்குச்
சொந்தமென் பார்க்கடிமை; சொல்லுபவர்க் கும்அடிமை!
இவ்வாறு செந்தமிழுக் கேற்றவொரு தொண்டனாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/134&oldid=1446186" இலிருந்து மீள்விக்கப்பட்டது